ஆலங்குளம் அருகே ஊராட்சித் தலைவருக்கு மிரட்டல்: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே கடனாகக் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட ஊராட்சித் தலைவருக்கு மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்புரத்தைச் சோ்ந்த மணிமாறன் மனைவி செல்வி. இவா், நாரணபுரம் ஊராட்சித் தலைவராக உள்ளாா். மணிமாறன் அதே பகுதியைச் சோ்ந்த அருணாசலம் மகன் சண்முகையா(30), பெரியசாமி மகன் முருகேசன்(30), மேலப்பாவூா் முருகன் மகன் காா்த்திக்(35) ஆகியோரிடம் ரூ. 48 லட்சம் கடன் கொடுத்திருந்தாராம்.

அந்தப் பணத்தை மணிமாறனும் அவரது மனைவியும் அவா்களிடம் திருப்பிக் கேட்ட போது, பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் அவதூறாக பேசி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் 3 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 36 லட்சத்தை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com