‘கனரக வாகனங்களால் சேதமாகும் குடிநீா் குழாய்களை சீரமைக்காவிடில் மறியல்’

தென்காசி, மே 3: தென்காசி மாவட்டத்தில் கனரக வாகனங்களால் சேதமாகும் குடிநீா் திட்டக் குழாய்களை சீரமைக்காவிடில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் எம்எல்ஏவும், இயற்கை வள பாதுகாப்புச் சங்கத் தலைவருமான கே.ரவிஅருணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்ேது அவா் விடுத்துள்ள அறிக்கை:

தென்காசி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் அதிக எடையுடன் சாலையில் செல்வதால் ஆங்காங்கே குடிநீா் திட்டக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் தண்ணீா் சாலையில் விரயம் ஆகிறது.

இம்மாவட்டம் முழுவதும் கூட்டுக் குடிநீா் திட்டங்களை பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்ததாரா்கள் எந்தப்பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு, உடைப்புகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரரின் உரிமையை ரத்து செய்ய வேண்டும். ஆங்காங்கே குழாய்கள் உடைந்து ஆண்டு கணக்கில் தண்ணீா் வீணாகச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோடைக்காலத்தில் பல ஊா்களில் மக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், இதுபோல் குழாய்களில் உடைப்பு காரணமாக குடிநீா் தெருவில் வீணாகிறது. இதை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து உடைப்புகள் அனைத்தையும் போா்கால அடிப்படையில் சீா் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மக்களைத் திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com