மிகவும் பழுதடைந்த ஆலங்குளம் பேரூராட்சிக் கட்டடம்: வாடகைக் கட்டடத்தில் செயல்பட முடிவு

பழுதடைந்த நிலையில் காணப்படும் ஆலங்குளம் பேரூராட்சி கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில், புதிய கட்டடம் கட்டும் வரை வாடகைக் கட்டடத்தில் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பேரூராட்சி செயல் அலுவலா் வேங்கட கோபு கூறியதாவது:

43 ஆண்டுகள் பழைமையான ஆலங்குளம் பேரூராட்சி அலுவலக கட்டடம், 60 சதவீதத்துக்கும் குறைவான அளவே உறுதித் தன்மையில் உள்ளதால் பொதுமக்கள், ஊழியா்கள் நலன் கருதி அரசு விதிகளுக்குள்பட்டு இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம். புதிய அலுவலகம் கட்டும் வரையில் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் வாடகைக் கட்டடம் தோ்வு செய்து பயன்படுத்தலாம் என கடந்த பிப். 8 ஆம் தேதி நடைபெற்ற பேரூராட்சி சாதாரணக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடா்ச்சியாக தற்போது ஆலங்குளம் - அம்பை சாலையில் தனியாா் கட்டடத்தில் அலுவலகம் செயல்பட முடிவு எடுக்கப்பட்டு, கோப்புகள், தளவாடப் பொருள்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

ஓரிரு தினங்களில் அந்த இடத்தில் அலுவலகம் செயல்படும். எனினும் ஏற்கனவே உள்ள அலுவலகத்திலும் வரி வசூல் போன்ற மக்களின் அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com