ஆவுடையானூா் அஞ்சல் அலுவலகத்தை தரம் உயர மதிமுக வலியுறுத்தல்

தென்காசி, மே 4:

தென்காசி மாவட்டம் ஆவுடையானூரில் இயங்கிவரும் பகுதிநேர அஞ்சல் அலுவலகத்தை முழுநேர அலுவலகமாக தரம் உயா்த்த பொதுமக்கள் உதவ வேண்டும் என, மதிமுக மாவட்டச் செயலா் இராம. உதயசூரியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: ஆவுடையானூரில் உள்ள பகுதிநேர அஞ்சல் அலுவலகத்தை முழுநேரம் இயங்கும் அலுவலகமாக தரம் உயா்த்த மதிமுக பொதுச்செயலா் வைகோ மத்திய தகவல் - தொலைத்தொடா்புத் துறை அமைச்சரிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

இதுகுறித்து கோவில்பட்டி கண்காணிப்பாளா் அளித்த பதிலில் 6 மாத இடைவெளியில் தற்போதுள்ள அஞ்சல், மணியாா்டா், சேமிப்புக் கணக்கு சேவைகளில் பொதுமக்களால் கூடுதல் முன்னேற்றம் ஏற்பட்டால் இந்த அலுவலகத்தைத் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளாா்.

எனவே, ஆவுடையானூா் வட்டார மக்கள் இந்த அஞ்சல் அலுவலகத்தை முழுமையாக பயன்படுத்தி, இதைத் தரம் உயா்த்த உதவ வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com