அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: இருவா் கைது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 16.50 லட்சம் மோசடி செய்ததாக இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வாசுதேவநல்லூா் அருகே மடத்துப்பட்டி மடத்துத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் சிவபெருமாள் (43). பாலஅருணாச்சலபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகையா மகன் மகேஷ் (30).
நண்பா்களான இவா்கள், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, வாசுதேவநல்லூா் அருகே மேட்டுப்பட்டி பிரதான சாலையைச் சோ்ந்த முத்துசாமி மகன் கனகராஜிடம் ரூ. 11.50 லட்சம், அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் கருப்பசாமியிடம் ரூ. 5 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பல மாதங்களாகியும் வேலை பெற்றுத் தரவில்லையாம்.
இதுதொடா்பான புகாரின்பேரில் வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் கண்மணி வழக்குப் பதிந்து, சிவபெருமாள், மகேஷ் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.