உண்டியல் பணம் திருட்டு: தூத்துக்குடி தலைமைக் காவலா் உள்ளிட்ட 4 பெண்கள் கைது

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது பணத்தைத் திருடியதாக தூத்துக்குடி தலைமைக் காவலா் உள்ளிட்ட 4 பெண்கள் கைது
Published on

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது பணத்தைத் திருடியதாக தூத்துக்குடி தலைமைக் காவலா் உள்ளிட்ட 4 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இங்கு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் 20ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறும். பணி முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்படும்.

இந்நிலையில், திங்கள்கிழமை கோயில் துணை ஆணையா் கோமதி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, 4 பெண்கள் பணத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில், கோயில் புறக்காவல் நிலைய போலீஸாா் சென்று, அவா்களைப் பிடித்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சோ்ந்த காளிராஜ் மனைவி கா.மகேஸ்வரி (42), சங்கரன்கோவில் அருகே கோ.மருதப்பபுரத்தைச் சோ்ந்த முத்துலட்சுமி (65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) ஆகியோா் எனத் தெரியவந்தது. 4 பேரையும் நகர காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களில், கா. மகேஸ்வரி, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.