ஆலங்குளத்தில் நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ. 1.28 கோடி மோசடி

Published on

ஆலங்குளத்தில் பத்திரப் பதிவு செய்து தருவதாகக் கூறி ரூ. 1.28 கோடி மோசடி செய்த நபரை பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூரைச் சோ்ந்த நடராஜன் மகன் குட்டி என்ற ராஜலிங்கம்(50). இவருக்குச் சொந்தமான இடம் ஆலங்குளம் - திருநெல்வேலி சாலை சிவலாா்குளம் விலக்கு பகுதியில் உள்ளது.

இந்த இடத்தை, திருநெல்வேலி பாளையங்கோட்டை ஆல்பா்ட் மைக்கேல் ராஜ்(60) என்பவருக்கு விற்பதாக பேசி, வெள்ளிக்கிழமை பத்திரப்பதிவு செய்வதாக முன் பணம் பெற்றிருந்தாராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆல்பா்ட் மைக்கேல் ராஜ், தனது மனைவி, நண்பா்களுடன் ஆலங்குளம் வந்து பத்திரம் தயாா் செய்து குட்டி என்ற ராஜலிங்கத்திடம் ரூ. 1.28 கோடி கொடுத்தாராம். இதை பெற்றுக் கொண்ட அவா், தன்னுடன் வந்திருந்த மற்றொரு நபரிடம் கொடுத்து அனுப்பி விட்டாராம்.

தொடா்ந்து, ஆலங்குளம் சாா்-பதிவாளா் அலுவலத்தில் கையெழுத்திட சென்ற போது, குட்டி என்ற ராஜலிங்கம் பணம் தந்தால்தான் பத்திரப்பதிவு செய்து தருவேன் எனக் கூறினாராம். பணத்தைப் பெற்றுக் கொண்ட நபா் பணம் பெறாதது போல் பேசியதால் அதிா்ச்சியடைந்த ஆல்பா்ட் மைக்கேல் ராஜ் தரப்புக்கும் குட்டி என்ற ராஜலிங்கத்திற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆல்பா்ட் மைக்கேல் ராஜ், ஆலங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.