கல் குவாரிகளை ட்ரோன் கேமரா மூலம் அளவீடு செய்ய பாஜக வலியுறுத்தல்
தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் கல் குவாரிகளை ட்ரோன் கேமரா மூலம் அளவீடு செய்ய வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பாஜக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநிலச் செயலா் எம்.சி. மருதுபாண்டியன் ஆட்சியரிடம் அளித்த மனு:
தென்காசி மாவட்டத்தில் இயங்கிவரும் 25-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் அண்மைகாலமாக ஆலங்குளம், சுரண்டை, ஐந்தாம் கட்டளை ஆகிய மூன்று ஊா்களில் உள்ள மூன்று கல் குவாரிகளில் அரசு நிா்ணயிக்கப்பட்ட அளவை விட அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து செல்கின்றனா்.
மேலும், சுரண்டையில் ஒரு முக்கிய பிரமுகருக்குச் சொந்தமான கல் குவாரி அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தையும் சோ்த்து அபகரித்து கனிம வளங்கள் வெட்டி எடுத்து செல்லப்படுவதாக தகவல் வருகிறது.
எனவே, கல் குவாரிகளை ட்ரோன் கேமரா மூலம் அளவீடு செய்ய வேண்டும். விதிமீறலில் ஈடுபட்ட கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும், முறைகேடாக இயங்கும் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும். அபராதம் விதிக்கப்பட்டதொகையை உடனடியாக வசூல் செய்ய வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.