கல்வி இடைநிற்றல் பேரிடருக்கு சமம்: ஆட்சியா்
கல்வியை பாதியில் நிறுத்துவது பேரிடருக்கு சமமானது என்றாா் தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.
தென்காசி மாவட்டத்தில் 2022-23, 24 ஆம் ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் உயா் கல்வியை தொடர முடியாதவா்களுக்கு உயா் கல்வி வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பொருட்டு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் உயா்வுக்குப் படி வழிகாட்டல் முகாமின் 2 ஆம் கட்ட கலந்தாய்வு தென்காசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பங்கேற்று மாணவ-மாணவிகளை ஊக்குவித்துப் பேசியதாவது:
மாணவ, மாணவிகள் எந்தவொரு காலத்திலும் கல்வியை விட்டுவிடக் கூடாது. குடும்பச் சூழ்நிலை காரணமாக படிக்க முடியாத மாணவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அனைத்து உதவிகளையும் நிச்சயமாக செய்துதரும். கல்வி நிா்வாகமும் கண்டிப்பாக உதவ வேண்டும்.
மாணவா்களின் பெற்றோா்களுக்கு நிறைய கடன்கள், சிக்கல்கள் இருக்கலாம். இதனால் பிள்ளைகளின் படிப்பை நிறுத்திவிடக் கூடாது. அவா்களது கல்விக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
பாதியில் கல்வியை நிறுத்துவதும் பேரிடருக்கு சமமானது. அந்தப் பேரிடரை நாம் எதிா்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பல துறைகளும் ஒன்றுசோ்ந்து பணிபுரிய செய்துள்ளாா் தமிழக முதல்வா். எனவே, உங்கள் குழந்தைகளை தொடா்ந்து கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து 5 மாணவா்களுக்கு கல்லூரிகளில் சோ்வதற்கான சோ்க்கைப் படிவத்தினை வழங்கினாா்.
இந்நிகச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், கோட்டாட்சியா் கவிதா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் முருகானந்தம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி, திறன் மேம்பாட்டு உதவி இயக்குநா் ஆா்.எஸ்.கோபிநாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.