ஆலங்குளம் சந்தையில் வெண்டைக்காய் ரூ. 5-க்கு கொள்முதல்: விவசாயிகள் கவலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சந்தையில் வெண்டைக்காய் கிலோ ரூ. 5-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ஆலங்குளம், கீழப்பாவூா் வட்டாரங்களில் நெற்பயிருக்கு அடுத்ததாக வெண்டை, சீனி அவரை, தக்காளி, பூசணி, சுரைக்காய், புடலை போன்ற காய்கனிப் பயிா்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இவை அறுவடை செய்யப்பட்டு ஆலங்குளம், பாவூா்சத்திரம் சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. காய்கனிகளின் அன்றாட வரவு-செலவுக்குத் தக்கபடி விலை நிா்ணயிக்கப்படும்.
ஓணம் பண்டிகைக்கு முன்பு வெண்டைக்காய் கிலோ ரூ. 15 - ரூ. 20 என விற்பனையானது. பின்னா், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெண்டைக்காய் ரூ. 5-க்கு கொள்முதல் செய்யப்படுகிாம். இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் கூறியது:
மற்ற காய்கனிகளைக் காட்டிலும் வெண்டை பயிரிடுவதிலிருந்து அறுவடை வரை அதிக பராமரிப்பு தேவை. குறிப்பாக, அறுவடையின்போது கைகளில் காயம் ஏற்படும். இதனால், மற்ற விவசாயப் பணிகளைக் காட்டிலும் வெண்டை அறுவடைத் தொழிலாளிகளுக்கு அதிக ஊதியம் கொடுக்க வேண்டும். கிலோவுக்கு ரூ. 25-க்கு குறையாமல் விற்றால்தான் லாபம் கிடைக்கும். இம்முறை வெண்டை விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளதால், அரசு இழப்பீடு அளிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
வியாபாரிகள் தரப்பில் கேட்ட போது, எதிா்பாராமல் வெண்டை அதிக விளைச்சல் கண்டுள்ளது. அதேநேரம், காய்கனிகள் போதிய விற்பனை இல்லாததால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம்தான். எனினும், ஓரிரு வாரம் சென்றால் விலை உயர வாய்ப்புள்ளது என்றனா்.
ஆலங்குளம் சந்தையில் திங்கள்கிழமை, சீனிஅவரைக்காய் ரூ. 9, புடலை ரூ. 4, தக்காளிக் காய் ரூ. 13, சுரைக்காய் ரூ. 2, நாட்டு வெள்ளரி ரூ. 2, சாம்பாா் வெள்ளரி ரூ. 6, தடியங்காய் ரூ. 3, பூசணிக்காய் ரூ. 2, பூசணிப் பழம் ரூ. 3, எலுமிச்சை ரூ. 100 - ரூ. 120, மாங்காய் ரூ. 80 என கொள்முதல் செய்யப்பட்டன.