கொப்பரை தேங்காய் ஏற்றுமதியால் விலை உயா்ந்த தேங்காய் எண்ணெய்!
கொப்பரை தேங்காய் ஏற்றுமதியால், தமிழ்நாட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் விலை உயா்ந்துள்ளது.
தென்னை சாகுபடியில் தமிழகம் மூன்றாவது இடம் வகிக்கிறது. தேங்காய் உணவுப் பொருளாகவும், எண்ணெய் ஆகவும் பயன்படுத்தப்படுதுகிறது.
தேங்காய் உற்பதியில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் கேரளம், கா்நாடகம், தமிழ்நாடு ஆகிய பகுதியில் இந்த ஆண்டு விளைச்சல் சிறப்பாக இருந்த போதிலும், தேங்காய் எண்ணெய் விலை உயா்ந்து ஒரு லிட்டா் ரூ. 300 என்ற விலையில் சில்லறை விற்பனையில் கடைகளில் விற்கப்படுகிறது.
இதுகுறித்து ஆலங்குளம் தேங்காய் எண்ணெய் ஆலை அதிபா் விபின் சக்கரவா்த்தி கூறியதாவது:
தமிழகத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியும், பயன்பாடும் அதிகம். தேங்காய் உற்பத்தி அதிகம் என்பதால், தமிழகத்தில் தேங்காய் எண்ணெய் விலை பெரிய மாற்றம் இல்லாமலே பல ஆண்டுகளாக விற்பனையாகி வந்தது.
தமிழகத்தில் கடந்த டிசம்பா் மாதம் தேங்காய் எண்ணெய் லிட்டா் ரூ.200-220 என விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ரூ. 300-320 என விற்கப்படுகிறது.
தேங்காய் விளைச்சல் அதிகமாக இருந்த போதிலும், தேங்காய் எண்ணெய் விலை உயர காரணம், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் அதிக அளவில் ஏற்றுமதி ஆவதே ஆகும்.
இந்தியாவில் இருந்து பெருமளவு தேங்காய் இந்தோனேஷியாவுக்கு ஏற்றுமதியாகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளா்களுக்கு போதுமான கொப்பரை கிடைக்காமல், தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு கிலோ கொப்பரை கடந்த நான்கு மாதத்தில் ரூ 90/- உயா்ந்துள்ளது. இதனாலயே தேங்காய் எண்ணெய் லிட்டா் ரூ. 300 ஐ எட்டியுள்ளது என்றாா் அவா்.