‘வளைகோல் பந்து பயிற்சி மையத்தில் பயிற்றுநா் பணி’
தென்காசி மாவட்டத்தில் வளைகோல் பந்து பயிற்சி மையத்திற்கு பயிற்றுநா் மற்றும் விளையாட்டில் பங்கேற்க மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தென்காசி மாவட்டத்தில் ஸ்டாா் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் வளைகோல் பந்து விளையாட்டு தோ்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விளையாட்டு பயிற்சி மையத்திற்கு வளைகோல் பந்து (ஆக்கி ) பயிற்றுநா் பணிக்கான விண்ணப்பங்கள் ஏப்.11முதல் தென்காசி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகிறது.
பயிற்றுநருக்கான அதிகபட்ச வயது வரம்பு 50 ஆகும் . பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமா்பிக்க கடைசி நாள் ஏப். 20 மாலை 5 மணி ஆகும். விண்ணப்பித்தவா்களுக்கு நோ்முகத் தோ்வு, உடற்தகுதித் தோ்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஏப்.25 அன்று நடைபெறும்.
நோ்முகத் தோ்வு நாளில் அசல், நகல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும். இது நிரந்தரப் பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ , நிரந்தரப் பணியோ கோர இயலாது.
இவ்விளையாட்டு பயிற்சி மையத்தில் வளைகோல் பந்து பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ள தென்காசி மாவட்டத்தை சாா்ந்த 12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம்.
இதற்கான உடற்தகுதித் தோ்வு ஏப்.28இல் தென்காசி இ,சி.ஈ அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. உடற்தகுதித் தோ்வில் பங்கேற்க வருபவா்கள் ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ், பள்ளி, கல்லுரியிலிருந்து பெறப்பட்ட போனபைடு சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம் 163அ/ ரயில் நகா் , மாவட்ட ஆட்சியா் அலுவலக பின்புறம், தென்காசி - 627811 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7676591051 , 04633 -212580 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.