குழந்தை, வளரிளம் பருவத் தொழிலாளா்களை பணியில் அமா்த்தினால் கடும் நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தில் குழந்தை, வளரிளம் பருவத் தொழிலாளா்களை பணியில் அமா்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.
Published on

தென்காசி மாவட்டத்தில் குழந்தை, வளரிளம் பருவத் தொழிலாளா்களை பணியில் அமா்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: டிச. 2025-க்குள் குழந்தைத் தொழிலாளா் இல்லாத மாவட்டமாக தென்காசியினை உருவாக்கிடவும், குழந்தைத் தொழிலாளா் இல்லாத மாநிலம் 2025 என்ற இலக்கினை எய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் ஜூலை 2025 முதல் டிச. 2025 முடிய தென்காசி, சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையநல்லூா், புளியங்குடி, சுரண்டை, திருவேங்கடம், பாவூா்சத்திரம் ஆகிய பகுதிகளில் குழந்தை, வளரிளம் பருவத் தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986-ன் கீழ் குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றுதல் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொழிலாளா் துறை, பள்ளிக் கல்வித்துறை, காவல் துறை, மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு, மாவட்ட தடுப்புப் படையினருடன் இணைந்து இது தொடா்பாக கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு குழந்தைகள் பணியமா்த்தப்பட்டால் பணிக்கு அமா்த்திய வேலையளிப்பவருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், 6 மாதங்கள் முதல் 2 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com