வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் போராட்டம்!
வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீவிர போராட்டத்தை முன்னெடுக்கும் என, மாநிலத் தலைவா் அப்துல்கரீம் கூறினாா்.
கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: வக்ஃப் சட்ட திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது. வக்ஃப் வாரிய சொத்துகளைப் பறிக்கவும், இதற்குமேல் சொத்து சோ்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடனும் இச்சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகின்றனா். இதற்கு சட்ட வடிவம் கொண்டுவந்தால் தீவிரமான போராட்டத்தை முன்னெடுப்போம்.
திருப்பரங்குன்றத்தில் இந்துக்கள் வழிபட கோயில் இருப்பதுபோல், இஸ்லாமியருக்கான தா்கா உள்ளது. தா்கா வழிபாட்டில் எங்கள் அமைப்புக்கு உடன்பாடு இல்லை என்றாலும், பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் அந்தத் தா்காவுக்கு சென்றுவருகின்றனா். இரு பிரிவினரும் வழிபாடு செய்ய தனித்தனி வாசல்கள் உள்ளன. வடமாநிலங்களைப்போல வழிபாட்டுத் தலங்களை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக செய்து வருகிறது.
பெரியாரை பொதுஎதிரியாக கட்டமைக்க சீமான் முயல்வது தவறானது. பெரியாரை முன்வைத்து அவா் செய்யும் அரசியல் தேவையற்றது என்றாா் அவா்.