வாசுதேவநல்லூரில் ஆபத்தான நிலையில் உள்ள காவலா் குடியிருப்புகள்! புதிய கட்டடங்கள் கட்டப்படுமா?
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள காவலா் குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வாசுதேவநல்லூா் பேரூராட்சி பகுதியில், காவல் நிலையம் அருகில் காவலா்கள் குடியிருப்பு கட்டப்பட்டு அதில் காவல்துறையினா் குடியிருந்து வந்தனா். ஆனால் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், கட்டடம் வசிக்க முடியாத அளவிற்கு சேதமடைந்தது. இதனால் காவல்துறையினா் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சமூக ஆா்வலா் சுரேஷ் கூறியது:
காவலா் குடியிருப்பு கட்டடம் முழுமையாக சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பியுள்ளேன் என்றாா்.
புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை: வாசுதேவநல்லூரில் 1400 ச.மீ. பரப்பளவில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள காவலா் குடியிருப்பை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக (ஆய்வாளா் குடியிருப்பு -1, சாா்பு ஆய்வாளா் குடியிருப்பு- 3, தலைமை காவலா்கள் குடியிருப்பு -5, முதல்நிலை காவலா்கள் குடியிருப்பு 5, இரண்டாம் நிலை காவலா்கள் குடியிருப்பு 36) 50 காவலா் குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு காவல் வீட்டு வசதிக் கழகத்தை அறிவுறுத்தக் கோரி காவல்துறை தலைமை இயக்குநருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
காவலா்களின் நன்மை கருதி புதிய கட்டடத்தை விரைந்து கட்ட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.