சென்னை - செங்கோட்டைக்கு வந்தே பாரத் ரயில்: எம்எல்ஏ மனு
சென்னை-செங்கோட்டைக்கு தென்காசி, சங்கரன்கோவில் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈ. ராஜா எம்.எல்.ஏ. சென்னையில் ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கிடம் மனு அளித்தாா்.
அதன் விவரம்: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில், ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
தென்காசி வழியாக திருநெல்வேலி - கொல்லம் ரயிலின் காலை, மாலை சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்,தென்காசி, சங்கரன்கோவில் வழியாக திருநெல்வேலியிலிருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள், சென்னையிலிருந்து சங்கரன்கோவில், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும், தென்காசி, சங்கரன்கோவில் வழியாக வாரத்திற்கு இரண்டு முறை திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை புருலியா லைன் ரேக்குகளைப் பயன்படுத்தி இயக்க வேண்டும், மதுரையில் சென்னை - குருவாயூா் விரைவு ரயிலை, மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலுக்கு இணைப்பு வழங்க வேண்டும், பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, மதுரை வழியாக செங்கோட்டை - தாம்பரம் எம்ஜி சகாப்தி தினசரி விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், பாவூா்சத்திரம், கீழக்கடை, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி நிலையங்களில் 24 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்துவதற்கு நடைமேடைகளின் நீட்டிப்பு பணியை விரைவுபடுத்த வேண்டும், தென்காசி சந்திப்பில் இயந்திரத்தை மாற்ற வேண்டிய தேவையை நீக்க, கீழப்புலியூா், கடையநல்லூா் இடையே ஒரு பைபாஸ் பாதை அமைக்க வேண்டும்.மேலும் கீழபுலியூா் நிலையத்தை ‘தென்காசி டவுன்‘ என்று மறுபெயரிட வேண்டும், தென்காசி மற்றும் செங்கோட்டை இடையே இரட்டை ஒற்றைப் பாதை யும், செங்கோட்டை ரயில் நிலையத்தில் மேலும் ஒரு நடைமேடையும் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.