இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்

திருச்செந்தூா் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
Published on

திருச்செந்தூா் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கொம்புத்துறை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு ஆய்வாளா் விஜய் அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா் உள்ளிட்ட போலீஸாா் கொம்புத்துறை கடற்கரைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக, சரக்கு வாகனத்திலும், பதிவு எண் இல்லாத டிரெய்லருடன் கூடிய டிராக்டரிலும் கொண்டு வரப்பட்ட, 30 கிலோ வீதம் 103 மூட்டைகளில் இருந்த சுமாா் 3,000 கிலோ பீடி இலைகளை போலீஸாா் கைப்பற்றினா். இதன் சா்வதேச மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், டிராக்டா் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வாகனங்கள் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Open in App
Dinamani
www.dinamani.com