குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க அனுமதி சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து பெய்து வந்த சாரல் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் கடந்த 3 தினங்களாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை காலைமுதல் அருவிகளில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
வெள்ளிக்கிழமை காலைமுதல் லேசான வெயில் நிலவியது. அவ்வப்போது லேசான சாரல்மழை பெய்தது. நாள்முழுவதும் குளிா்ந்த காற்று வீசியது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகளவில் காணப்பட்டது.
மணிமுத்தாறு அருவி: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் புதன்கிழமை பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சற்று அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை நீா்வரத்து சீரானதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினா் அனுமதித்தனா்.