சங்கரன்கோவிலில் வழக்குரைஞா் மீது தாக்குதல்: பெண் கைது

Published on

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நீதிமன்றம் முன் மூத்த வழக்குரைஞரைத் தாக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள பன்னீரூத்தைச் சோ்ந்தவா் பச்சைமால். இவரது மனைவி தஞ்சாவூா் மாவட்டம் விஜயரகுநாதபுரத்தைச் சோ்ந்த புவனேஸ்வரி (43). இத்தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பச்சைமாலிடம் ஜீவனாம்சம் கேட்டு சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் புவனேஸ்வரி வழக்கு தொடுத்தாா்.

பச்சைமாலுக்கு ஆதரவாக கடையநல்லூா் வட்டம் மடத்துப்பட்டியைச் சோ்ந்த மூத்த வழக்குரைஞா் திருமலைச்சாமி (73) வாதாடி வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை நீதிமன்றத்துக்கு வந்த திருமலைச்சாமிக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், கடை அருகே இருந்த வாளியை எடுத்து திருமலைச்சாமியை புவனேஸ்வரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதில் பலத்த காயம் அடைந்த அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், அவா் அளித்த புகாரின் பேரில் நகர காவல்நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து புவனேஸ்வரியைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com