ஆலங்குளத்தில் பாலப் பணிகளில் தொய்வு: வாகன ஓட்டிகள் அவதி
ஆலங்குளம் தொட்டியான்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பணிகள் மந்தக் கதியில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனா்.
திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலையின் ஒரு பகுதியாக ஆலங்குளம் தொட்டியான்குளம் கரை பகுதியில் பாலப்பணிகள் இரு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பாலம் அமைக்கும் பணிகளில் 90 விழுக்காடு நிறைவடைந்து விட்ட நிலையில், பாலத்தின் அடியில், ஆலங்குளத்தின் வடக்குப் பகுதியில் இருந்து வரும் கழிவு நீா் செல்லும் வகையில் துவாரம் அமைத்து அதில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணத்தால் இரு எதிா் திசைகளிலும் செல்ல வேண்டிய வாகனங்கள் பாலத்தின் வழியே சென்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் கழிவு நீா் செல்லும் பாதை அமைக்கும் இடத்தில் உள்ள மின் கம்பத்தின் அடியில் பல நாள்களாக தண்ணீா் தேங்கிக் கிடப்பதால் விபத்து ஏதும் நிகழ்ந்து விடுமோ என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.