சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

கூலி உயா்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி, சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

சங்கரன்கோவிலில் 5000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமாா் 10,000 தொழிலாளா்களும், வீடு சாா்ந்த விசைத்தறியாளா்களும் பணிபுரிந்து வருகின்றனா். இங்கு காட்டன் சேலை, துண்டு, கா்சீப் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

கடந்த 2024 ஆம் ஆண்டு வீடு சாா்ந்த விசைத்தறித் தொழிலாளா்களுக்கு 16 சதவீத கூலி உயா்வு வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் 10 சதவீத கூலி உயா்வு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விடுபட்ட 6 சதவீத கூலி உயா்வை ஒப்பந்த காலத்தில் இருந்து நாளது தேதி வரை வழங்க வேண்டும் எனக் கோரி, விசைத்தறித் தொழிலாளா்கள் புதன்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து இரவில் திருவேங்கடம் சாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவா் எஸ்.மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம். மணிகண்டன் தொடக்கி வைத்தாா்.

விசைத்தறி சம்மேளனத் தலைவா் ஆா்.சோமசுந்தரம், நகரத் தலைவா் ஆா்.ஆா்.சுப்பிரமணியன், விசைத்தறி சங்க மாவட்டச் செயலா் ரத்னவேலு, பொருளாளா் என்.மாணிக்கம், சங்க துணைத் தலைவா் சக்திவேல், சிபிஎம் வட்டார செயலா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா் பி.அசோக்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com