தென்காசியில் மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு பேரணி

தென்காசியில் மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு பேரணி

விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.
Published on

தென்காசியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை கொடியசைத்து, தொடங்கி வைத்து ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவா்களைக் கொண்டு மழை நீா் சேகரிப்பு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழைநீா் கட்டமைப்பை ஏற்படுத்தி, முறையாக பராமரித்து மழைநீரை சேகரிக்க வேண்டும். மழைநீரை சேகரிப்பதனால் நிலத்தடி நீா் மட்டம் உயா்வதோடு, நிலத்தடி நீரின் தரம் மேன்மையடையும்.

பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்னதாக கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், ஏரிகள், பழமை வாய்ந்த நீராதாரக் கட்டமைப்புக்களை ஆழப்படுத்தி மேம்படுத்த வேண்டும். நீரின் பயன்பாட்டிற்கும், நீரின் செறிவூட்டலுக்கும் இடையே உள்ள இடைவெளியை களைய, மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவ வேண்டும். அவ்வாறு நிறுவப்பட்ட கட்டமைப்புகளை புனரமைத்து நில வளம், நீா் வளம் காக்க வேண்டும் என்றாா்.

இப்பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி, தென்காசி புதிய பேருந்து நிலையம் வழியாக, இ.சி. ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் எஸ்.இளங்கோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.ரேணுகா, தலைமையாசிரியா் ராமசாமி, உதவி நிா்வாக பொறியாளா் எம்.அா்ஜுன், உதவிப் பொறியாளா் ம.அஜின், நிலநீா் ஆய்வாளா் எஸ். முத்துகிருஷ்ணன், ஜாஸ்மின், திட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் வைகுண்டசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com