Enable Javscript for better performance
பிரதமர் மோடி கடினமாக உழைக்கக் கூடியவர்: கங்கனா ரனாவத்- Dinamani

சுடச்சுட

  

  பிரதமர் மோடி கடினமாக உழைக்கக் கூடியவர்: கங்கனா ரனாவத்

  By DIN  |   Published on : 09th January 2020 06:41 PM  |   அ+அ அ-   |    |  

  Kangana_Ranaut


  பிரதமர் நரேந்திர மோடி கடினமாக உழைக்கக் கூடியவர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

  'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் கல்விச் சிந்தனை அரங்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

  "ஜெயலலிதா இன்று நம்முடன் இல்லை என்றாலும் அவர் தமிழக மக்கள் மனங்களை ஆள்கிறார். நான் அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது.

  எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் போல நடிகர்கள் எந்த ஆராய்ச்சியும் செய்யமாட்டார்கள்.

  தாய்மை என்பது உடல்ரீதியான ஒன்றுமட்டுமல்ல, அது உணர்வுப்பூர்வமான ஒன்றும்தான். தாய்மைக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. தமிழகத்தில் ஜெயலலிதா அனைவராலும் அம்மா என்று அழைக்கப்படுவார். எனவே, அது மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்றுதான். இது ஆண்களுக்கும்கூட பொருந்தும்.

  அதிகாரம் படைத்தவர்களைப் பார்த்து நான் அஞ்சியதில்லை. பொதுவாக நான் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நபர். என்னைப் பொறுத்தவரை நான் மிகவும் பாதுகாப்பான சூழலில்தான் பிறந்தேன். என் வாழ்க்கையைப் பொறுத்தவரை நான் எடுக்கும் முடிவுதான் சிறந்த முடிவு. 15 வயது முதலே நான் சுயாதீனமாக வாழத் தொடங்கிவிட்டேன். நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்பது எனக்கு திருப்தியளிக்கவில்லை.

  அனைவரும் என்னை வித்தியாசமாகவே பார்த்தனர். எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. எதை எதிர்பார்க்க வேண்டும், ஊடகங்களிடம் எப்படி பேச வேண்டும் உள்ளிட்டவை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், தற்போதைய நிலையை நான் அடைந்திருப்பதற்கு தகுதியானவளாக உணர்கிறேன். என்னை யாரும் ஒரு பிரபலமாகவே பார்த்தது கிடையாது. நான் விமரிசனங்களை ஏற்றுக்கொள்வேன்.

  இங்கு பொதுவாகவே 30 வயதை அடைந்துவிட்டால் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறிவிடுவார்கள். ஆனால், 30-வது வயதில்தான் நாம் அனுபவிக்கத் தொடங்குவோம். சினிமாத் துறையின் மேல் நான் கொண்ட காதலானது வயதின் காரணத்தினால் தடைபடாது. எனக்குப் பிடித்த கதையைத் தேர்வு செய்து என்னால் வெற்றிபெற முடியும். தற்போது, எனக்கென்று நான் ஒரு அடையாளத்தை உருவாக்கியிருக்கிறேன். நான் திருப்திகரமாக உணர்கிறேன். 

  சினிமாத் துறை ஒரு சார்புடையதாக உள்ளது. 99 சதவீத மக்கள் ஒரு சித்தாந்தத்துடன் உள்ளனர். முஸ்லிம்கள் ரவுடிக் கும்பல்களாகக் காட்டப்பட்டாலும், ஹீரோ கும்பல்களாக ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான கும்பல்களாகவே காட்டப்படுகின்றனர்.

  எதிர்ப்புணர்வு என்பது தேவை. வலதுசாரியாக இருந்தாலும், இடதுசாரியாக இருந்தாலும் இருபக்கமும் சமமாக இருக்க வேண்டும்.

  நாம் கேள்விகளை எழுப்பும்போது அதனுடைய எதிர்வினை என்னவென்பது தெரியும். எனது பின்புலத்தில் யாரும் இல்லை என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும், நான் அந்த சூழலை நன்றாகக் கையாண்டேன். 

  வன்முறையை உண்டாக்குபவர்கள் நிச்சயம் நம்முடைய எதிர்காலமாக இருக்க முடியாது. நாம் இன்னும் சுதந்திரத்துக்கு முந்தையக் காலகட்டத்தின் மனநிலையிலேயே இருக்கிறோம். இது ஜனநாயகம். இது ஜனநாயகத்தின் ஊடாக நாம் தேர்ந்தெடுத்த அரசாகும். நாம் எதை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதில் சிக்கல் உள்ளது.

  காஷ்மீர் விடுதலை குறித்த பதாகைகளை ஏந்தக் கூடாது. மாற்றுக் கருத்து என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டும்.

  கல்வி முறையில் பிரச்னை உள்ளது. இளைஞர்கள் தேசத்துடன் தொடர்பற்ற நிலையில் உள்ளனர். நாம் எங்கேயோ தவறாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதை சரி செய்ய வேண்டும். தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்கமாட்டேன், இதைச் செய்யமாட்டேன், அதைச் செய்யமாட்டேன் என்றால் எதைத்தான் செய்வீர்கள்.

  போராட்டங்கள் கும்பல் சண்டைகளாக மாறுகிறது. இணையதள சேவையை முடக்குகின்றனர். மாணவர்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் ஹீரோக்களாக இருக்கக் கூடாது.

  பிரதமர் நரேந்திர மோடி கடினமாக உழைப்பவர். அதுபோதுமானது. அந்தக் குணம்தான் என்னை ஈர்த்தது.

  ஆட்சிக்கு வந்த பிறகு 5 ஆண்டுகள் என்பது அவர்களுடையதுதான். அந்த 5 ஆண்டுகால மதிப்பீட்டின்படி அடுத்த 5 ஆண்டுகளுக்காக நீங்கள் எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும்" என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai