கல்விச் சிந்தனை அரங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கல்விச் சிந்தனை அரங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கல்விச் சிந்தனை அரங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு மாநாடு சிறப்பாக நடைபெற பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு (‘திங்க்எடு’) சென்னையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடைபெறும் 10-வது கல்விச் சிந்தனை அரங்கை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் க. பொன்முடி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கல்விச் சிந்தனை அரங்கு மாநாடு சிறப்பாக நடைபெற பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி எழுதியிருக்கும் கடிதத்தில், 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் 10வது கல்விச் சிந்தனை அரங்கு குறித்து அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா மறுஆக்கம் என்பதை வலியுறுத்தும் இந்த மாநாட்டின் கொள்கை வியக்கத்தக்கது.

தனிநபரின் நன்னடத்தையை உருவாக்க, நற்குணத்தை மேம்படுத்த கல்வி உதவுகிறது. நமது நோக்கமே நாட்டின் கல்வி தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்துவது என்பதே. கொள்கை மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான செயல்பாடுகளுடன் சற்றும் முயற்சியில் சளைக்காத, நாட்டின் கல்வித் துறை மறுஆக்கம் செய்வதை நோக்கியே உள்ளது. 

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, நாட்டின் இலக்குகளை அடையும் வகையில், நமது கல்வித்துறை மறுஆக்கம் செய்யப்படும். நமது இளைஞர்களை திறன்படைத்தவர்களாகவும், அவர்களது எதிர்காலத்தை தயார்படுத்தும் வகையிலும் அது அமையும்.

கரோனா பேரிடர் காலத்தில், அன்றாட வகுப்புகள் நடப்பதை தகவல் தொழில்நுட்பம் உறுதி செய்தது. இ-வித்யா, ஒரு வகுப்பு ஒரு அலைவரிசை போன்றவை புதிய கல்வி கட்டமைப்பை உருவாக்கி, நாட்டில் உள்ள இளைஞர்களின் கல்விக் கனவுக்கு உதவியது. இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட், உயர் கல்வியின் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில் பல முன்னெடுப்புகளுடன் அமைந்திருப்பதாக தேசிய எண்ம பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நாடு சுதந்திரமடைந்து 75வது ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில், அனைத்துத் துறைகளிலும் நாடு தன்னிறைவு அடைய அயராது பாடுபட்டு வருகிறோம். புதிய இந்தியாவின் தாரக மந்திரம் 'போராடு மற்றும் வெற்றிபெறு' என்பதே.

நமது நாட்டை புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற நமது கடமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த கல்விச் சிந்தனை அரங்கு அமைந்துள்ளது. மாநாட்டில், மாணவர்கள், கல்வியாளர்கள், தொழில்துறையினர் ஒன்று கூடி, தங்களது கருத்துகளை முன்வைப்பது, கல்வித் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான இலக்கை அடைய வழிகோலும்.

10வது கல்விச் சிந்தனை அரங்கு வெகு சிறப்பாக நடைபெற்று வெற்றிபெற எனது வாழ்த்துகள் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com