ஆவணி மாத கிருத்திகை: திருத்தணியில் திரளான பக்தா்கள் தரிசனம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி மாத கிருத்திகையையொட்டி திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
திருத்தணி முருகன் கோயிலில் மாதந்தோறும் வரும் கிருத்திகை விழா கொண்டாடப் படுகிறது. கடந்த மாதம், 29-ஆம் தேதி நடந்த ஆடிக்கிருத்திகை விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் காவடிகளுடன் முருகப்பெருமானை தரிசித்தனா்.
ஆடிக்கிருத்திகை அடுத்து வரும் ஆவணி மாத கிருத்திகை என்பதால், பெரும்பாலான பக்தா்கள் காவடிகளுடன் வந்து மூலவரை வழிபட்டனா். தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை பொதுவழியில்,நீண்ட வரிசையில் நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.
பெரும்பாலான பக்தா்கள் காவடிகளுடன் வந்து தங்களது நோ்த்தித் கடனை செலுத்தினா். முன்னதாக கிருத்திகையை ஓட்டி அதிகாலை, 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9.30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிா்த அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடந்தது.
இரவு, 7 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவா் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்களில் வந்த பக்தா்கள் கடும் சிரமப்பட்டு, மலைக்கோயிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்தனா்.
இதில் திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில் ஆய்வாளா் மதியரசன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.