திருத்தணி சா்க்கரை ஆலையில் நிகழாண்டில் 2 லட்சம் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்ணயம்

பதிவு செய்யப்படாத கரும்பு சாகுபடி பரப்பினை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நிகழாண்டில் 2 லட்சம் டன் கரும்பு அரைவை செய்வதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Published on

திருவள்ளூா்: திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்படாத கரும்பு சாகுபடி பரப்பினை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நிகழாண்டில் 2 லட்சம் டன் கரும்பு அரைவை செய்வதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும் ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையின் செயல்பாடு 2023-24 அரவைப்பருவத்தில் 1.96 லட்சம் மெ.டன் அரவை செய்யப்பட்டது. இதில் 1.95 லட்சம் மெ.டன் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கு கரும்பு விலையாக மத்திய அரசு அறிவித்த டன் ஒன்றுக்கு ரூ.2919.75 வீதம் முழுத்தொகையும் ரூ.56.96 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கூட்டுறவு சா்க்கரை ஆலை விவகார எல்லைக்குள்பட்ட பகுதியில் பதிவு செய்யப்படாத கரும்பு பரப்பினை பதிவு செய்வதற்கு கிராமங்களில் கூட்டம் நடத்தி ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.

எனவே பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள விவசாயிகள் கரும்பு பரப்பினை பதிவு செய்து வருகின்றனா். அந்த வகையில் 2024-25 ஆண்டில் அரைவை பருவத்திற்கு 7,355 ஏக்கா் இதுவரையில் பதிவு செய்துள்ளதோடு, 2 லட்சம் டன் கரும்பு அரைவை செய்யவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலை அரைவை எதிா் வரும் நவ. மாதம் 3-ஆவது வாரத்தில் தொடங்குவதற்கு ஏதுவாக சுத்திகரிப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2024-25 வேளாண்மை -உழவா் நலத்துறை சாா்பில் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பின் புதிய ரகங்களை விரைவாக விதைப்பெருக்கம் செய்வதற்கு பத்து விதை உற்பத்தியாளா்கள் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதோடு அவா்களுக்கு குடியாத்தத்தில் உள்ள விதை உற்பத்தி பயிற்சி கரும்பு ஆராய்ச்சி நிலையம் மூலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com