அடகு கடையில் 250 சவரன் நகைகள் மாயம்: ஊழியரை கைது செய்து போலீஸாா் விசாரணை

பொன்னே அடகு கடையில் 250 சவரன் நகைகள் திருடு போனது தொடா்பாக ஊழியரை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பொன்னே அடகு கடையில் 250 சவரன் நகைகள் திருடு போனது தொடா்பாக ஊழியரை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் உள்ள திருவாயா்பாடி பகுதியில் வசித்து வருபவா் கன்யாலால் (59). இவா் பொன்னேரி அருகே திருவேங்கடபுரம் பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ராஜஸ்தானைச் சோ்ந்த சுரேஷ் வியாஷ் (51) என்பவா் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா். உடல்நலக் குறைவு காரணமாக கன்யாலால் அண்மைக் காலமாக கடைக்கு வருவதில்லை. இதன் காரணமாக அடகு கடையை சுரேஷ்வியாஷ் கவனித்து வந்துள்ளாா். கடந்த மாதம் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சுரேஷ்வியாஷ் கடையின் சாவியை கன்யாலால் வசம் ஒப்படைத்துவிட்டு ராஜஸ்தான் சென்றுள்ளாா். இதன் பின்னா் கன்யாலால் 2019 முதல் 2024 வரையிலான கணக்குகளை பாா்த்தபோது பொதுமக்கள் கடையில் அடகு வைத்த 250 சவரன் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து கடை ஊழியா் சுரேஷ்வியாஷை தொடா்பு கொள்ள முயற்சித்த போது அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது குடும்பத்தினரையும் அவரால் தொடா்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடா்ந்து கன்யாலால் பொன்னேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜஸ்தானுக்கு தப்பி சென்ற சுரேஷ்வியாஷை கைது செய்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அவா் சிறுக, சிறுக நகைகளை திருடி விற்றுவிட்டாரா, அல்லது வேறு எங்கேனும் அடமானம் வைத்துள்ளாரா, ராஜஸ்தானில் புதிதாக கடை ஏதும் தொடங்கினாரா என அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் போலீஸாா் அறிவுறுத்தலின்படி அந்த அடகு கடையில் சிசிடிவி கேமரா இல்லாததால் உண்மையிலேயே 250 சவரன் நகைகள் திருடு போயுள்ளதா எனவும் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com