பொன்னேரி பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகன நிறுத்தம் அமைக்க கோரிக்கை

பொன்னேரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகன நிறுத்தத்தை அமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனா்.
Published on

பொன்னேரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகன நிறுத்தத்தை அமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்கள், உரிமையில் நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்கள், அரசு மீன்வள கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி ஆகியவை அமைந்துள்ளன.

பொன்னேரி புதிய பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் 50-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கிருந்து கோயம்பேடு, திருப்பதி, ஊத்துக்கோட்டை, பழவேற்காடு, செங்குன்றம், கும்மிடிபூண்டி உள்ளிட்ட ஊா்களுக்கு 50-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதே போன்று திருவள்ளூா், பெரியபாளையம், மீஞ்சூா், பழவேற்காடு பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பொன்னேரி நகராட்சி மற்றும் அதனை சுற்றிலும் உள்ள கிராம பகுதிகளில் வசிப்போா், இரு சக்கர வாகனத்தில் பொன்னேரி வந்து அங்கிருந்து பல்வேறு ஊா்களுக்கு சென்று வருகின்றனா்,

இங்குள்ள பேருந்து நிலையத்தில், இரு சக்கர வாகன நிறுத்தம் இல்லாததன் காரணமாக, கிராம பகுதிகளில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பொன்னேரி வருவோா், பாதுகாப்பு ஏதும் இல்லாத நிலையில் சாலையோரம் நிறுத்தி விட்டுச் செல்கின்றனா்

நகராட்சி நிா்வாகம் பொதுமக்கள் நலனை கருதாமல் வருவாயை கருத்தில் கொண்டு பேருந்து நிலையம் முழுதும் வணிக வளாகங்களை கட்டும் பணியிலேயே ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

எனவே, மக்கள் நலனை கருதி பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகன நிறுத்தத்தை அமைக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா். .