அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள்: வரைமுறை செய்ய விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் அனுமதியற்ற கல்வி நிறுவனங்களை வரன்முறைபடுத்த மீண்டும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திட்டமில்லா பகுதிகளில் 1.11.2011-க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 1.8.2024 முதல் 31.1.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை 25.6.2024-இல் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் அரசு கடிதம் (நிலை) 18.2.2020-இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளைப் பின்பற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோா்கள் இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். மேலும், இந்த இறுதி வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.