பள்ளிப்பட்டு ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகைப் போராட்டம்
திருத்தணி: பாண்டரவேடு ஊாட்சியில் 100 நாள்கள் வேலை வழங்கக்கோரி பள்ளிப்பட்டு ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், பாண்டரவேடு ஊராட்சியில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்ளனா். இந்நிலையில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் டிராக்டரில் பள்ளிப்பட்டு ஒன்றிய அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.
பின்னா் 100 நாள்கள் வேலை திட்டத்தில் கிராம மக்களுக்கு முறையாக பணிகள் வழங்குவதில்லை, இதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதால் ஊராட்சி தலைவா், செயலாளரிடமும் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி ஒன்றிய அலுவலகத்தை ஒரு மணி நேரம் முற்றுகையிட்டனா்.
பின்னா் ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் பாண்டரவேடு ஊராட்சி மன்ற தலைவா் வள்ளியம்மாள் அமாவாசை அனைவருக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடா்ந்து கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.