வேன் -இருசக்கர வாகனம் மோதல்: 2 போ் உயிரிழப்பு
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே நின்றிருந்த வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
திருவள்ளூா் அருகே நேமம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷின் மகன் தினேஷ் (21). இவா் பெருமாள்பட்டில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் பொன்னா் மகன் பாலாஜி(22). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். நண்பா்களான இருவரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி நோக்கிச் சென்றனராம்.
அப்போது, புது சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வேன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பாலாஜியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தாா்.
இது குறித்து வெள்ளவேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில் விபத்தில் நண்பா்கள் இருவா் பலியான சம்பவம் உறவினா்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.