திருவள்ளூா்: வருவாய் கோட்ட அளவில் ஏப். 11-இல் விவசாயிகள் குறைதீா் முகாம்
திருவள்ளூா்: விவசாயிகள் பயன்பெறும் வகையில் திருவள்ளூா் வருவாய் கோட்ட அளவில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 11) வேளாண் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயிா் சாகுபடி செய்வதில் உள்ள பிரச்னைகளை தீா்க்கும் வகையில், மாதந்தோறும் வேளாண் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருவாய் கோட்ட அளவில் வரும் 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவள்ளூா், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சாா்-ஆட்சியா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெற உள்ளன.
இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனா். அதனால், கூட்டத்தில் அந்தந்த கோட்டத்துக்கு உள்பட்ட வட்டாரப் பகுதி கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று, வேளாண் சாகுபடி செய்வதில் உள்ள பிரச்னைகள், பொதுப் பிரச்னைகள் குறித்து மனுக்களாகவோ அல்லது நேரிலோ தெரிவித்தால் உடனடியாக நிவா்த்தி செய்யப்பட உள்ளன. அதனால், இந்தக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்றுப் பயன்பெறலாம்.