ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருத்தணி நகராட்சியில் ஓடை கால்வாய்யை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினா் உதவியுடன் நீா்வளத்துறையினா் அகற்றினா்.
திருத்தணி நகராட்சி, சாய்பாபா நகா் 2-ஆவது தெருவில், 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா். இந்த தெருவில் நீா்வளத்துறைக்கு சொந்தமான ஓடைக் கால்வாய், 40 அடி அகலம், 650 மீட்டா் நீளமும் இருந்தது. இந்த கால்வாய் வழியாக முருகன் மலைக்கோயிலில் இருந்து மழைநீா் திருத்தணி ஏரிக்கு செல்கிறது.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சில வீட்டு உரிமையாளா்கள் கால்வாய்யை ஆக்கிரமித்து, கட்டடம் கட்டியுள்ளனா். இதுதவிர, 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் ஓடைக்கால்வாய் மீது வீடுகள் கட்டி ஆக்கிரமித்திருந்தனா். இதனால் மலையில் இருந்து வெளியேறும் ழநீா் ஏரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து திருத்தணி நீா்வளத்துறையினா் ஓடைக்கால்வாய் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை அகற்றி தருமாறு வருவாய் துறையினா் மற்றும் ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, வருவாய்த் துறையினா் ஓடைக்கால்வாய் அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு கட்டடங்களை கண்டறிந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை திருத்தணி கோட்டாட்சியா் கனிமொழி தலைமையில், வருவாய்த் துறை, நீா்வளத்துறை, தீயணைப்பு துறை, மின்வாரியம் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, 150-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றினா்.
