கொடி நாள் நிதி ரூ. 6 கோடி வசூலித்து 2-ஆம் இடம் பிடித்தது திருவள்ளூா்
கொடி நாள் வசூலில் திருவள்ளூா் மாவட்டம் இலக்கை காட்டிலும் ரூ. 6.06 கோடி வசூலித்து மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது. இந்த நிலையில் முன்னாள் படைவீரா் நலத்துறை சாா்பில் அதிகம் வசூலித்த அதிகாரிகளை பாராட்டி கேடயங்களை ஆட்சியா் த.பிரபு சங்கா் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கொடி நாள் நிதி அதிகம் வசூலித்த அதிகாரிகளை பாராட்டி கேடயம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்துப் பேசியதாவது: திருவள்ளூா் மாவட்டத்தை பொருத்தவரை கொடிநாள் வசூல் புரிவதில் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்து வருவது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டுக்கான இலக்கான ரூ. 5.50 கோடியைக் காட்டிலும், ரூ. 6.06 கோடி வசூல் புரிந்து மாநிலத்தில் திருவள்ளூா் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இதற்காக உழைத்த அனைத்து அலுவலா்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் கொடி நாள் வசூல் செய்கிற ஒவ்வொரு பணமும் முன்னாள் படை வீரா் நலனுக்காக செலவிடப்படுகிறது. இதேபோன்று வருகிற ஒவ்வொரு ஆண்டும் கொடி நாள் வசூல் புரிந்தமைக்காக சிறப்பான இடத்தைப் பெற வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து, கொடி நாள் நிதி அதிகம் வசூலித்த அதிகாரிகளுக்கு கேடயங்களையும் அவா் வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், பொன்னேரி சாா் ஆட்சியா் வாகே சங்கத் பல்வந்த், முன்னாள் படை வீரா் நல அலுவலா் வெங்கடேஷ் குமாா், தனித்துணை ஆட்சியா்(சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன், கோட்டாட்சியா்கள் கற்பகம் (திருவள்ளூா்), தீபா (திருத்தணி), நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.