புட்லூா் ரயில் நிலையத்தில் மின்தூக்கி, சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி கையொப்ப இயக்கம்
திருவள்ளூா் அருகே புட்லூா் ரயில் நிலையத்தில் பயணிகள் எளிதில் செல்லும் வகையில் மின்தூக்கி மற்றும் சுரங்கப்பதை அமைக்கக்கோரி ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளா் கூட்டமைப்பினா் கையொப்ப இயக்கம் நடத்தினா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் ரயில் மாா்க்கத்தில் திருவள்ளூருக்கு முன்னதாக புட்லூா் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகில் மிகவும் பிரசித்தி பெற்ற பூங்காவனத்தம்மன் என்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் மற்றும் காக்களூா் தொழிற்பேட்டை உள்ளது. அதோடு இந்த புட்லூா் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து வருகின்றனா். இதுபோன்று அதிகம் போ் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைத்துள்ள நடை மேம்பாலம் உயரமாக உள்ளது. இதன் காரணமாக முதியோா், கா்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் நாள்தோறும், படிக்கட்டுக்களில் ஏறி அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும், இங்கு பயணிகளின் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்கப்படாமல் உள்ளது. அதனால் இங்கிருந்து நாள்தோறும் செல்லும் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி சென்று வரும் நிலையுள்ளது. புட்லூா் ரயில் நிலையத்தின் இருபுறங்களிலும் மின்தூக்கி வசதியும், ரயில் தண்டவாளத்தை எளிதாக கடக்கும் வகையில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கவும் என ரயில் பயணிகள், மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினா்கள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனா்.
எனவே இதை வலியுறுத்தும் நோக்கத்தில் புட்லூா் ரயில் நிலையம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. அப்போது, புட்லூா் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற ரயில் பயணிகள் அனைவரும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கையொப்பமிட்டனா்.