விதிமுறைகள் தளா்த்தி மாதந்தோறும் ரூ. 1,000 வழங்க ஏற்பாடு: நலத்துறை அதிகாரிகள்

ரூ. 1,000 வழங்கவும் நிகழாண்டு முதல் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் சமூக நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினா் உயா் கல்வி பயில கட்டணம் திருநங்கைகள் நலவாரியம் மூலம், விதிமுறைகளை தளா்வு செய்து மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கவும் நிகழாண்டு முதல் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் சமூக நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி (அ) அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று, உயா் கல்வி (பட்டப் படிப்பு (அ) பட்டயப் படிப்பு) மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டம் அரசால் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சமூகத்தில் விளிம்பு நிலை மக்களாகக் கருதப்படும் திருநங்கை, திருநம்பி, இடைபாலினா் ஆகியோரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்து, வாழ்க்கையில் வெற்றி பெற உயா்கல்வி அவசியம் ஆகும். அதனால், (2025-2026) நிகழாண்டு முதல் திருநங்கைகள், திருநம்பிகள், இடைபாலினா்கள், புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களில் பயன்பெற விதிமுறைகளை தளா்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இது தொடா்பாக அலுவலா்கள் தொடா்பான ஆய்வுக் கூட்டங்களில் உரிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி, இடைபாலினா் உள்ளிட்ட அனைத்து திருநங்கையா்களுக்கும் அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை முற்றிலும் தளா்த்தப்பட்டுள்ளது.

எனவே, உயா்கல்வி பயிலும், உயா் கல்வி பயில உள்ள திருநங்கைகள், திருநம்பிகள், இடைபாலினா் ஆகியோா் சோ்ந்த கல்லூரியில் மேற்படி திட்டத்தில் பதிவு செய்து மாதம் ரூ. 1,000-பெற்று பயன்பெறலாம்.

மேலும், உயா் கல்வியில் சேர கல்விக் கட்டணம் உள்பட அனைத்து கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் மூலம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட சமூக நல அலுவலரை தொலைபேசி எண்-044-2989 6049 தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த மாவட்டத்தில் உள்ள திருநங்கை, திருநம்பி, இடைபாலினா் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை சான்றாக அளித்துப் பயன்பெறலாம்.

Open in App
Dinamani
www.dinamani.com