திருவள்ளூா் அரசு மருத்துவமனை மருத்துவா் இடமாற்றம்: மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு!

திருத்தணி விவசாய கூலி தொழிலாளியின் சடலத்தை மாற்றி பிகாருக்கு அனுப்பி வைத்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட மருத்துவரை இடமாற்றம்.
Published on

திருத்தணி விவசாய கூலி தொழிலாளியின் சடலத்தை மாற்றி பிகாருக்கு அனுப்பி வைத்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட மருத்துவரை இடமாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அடுத்த புஜ்ஜிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாய கூலி தொழிலாளி ராஜேந்திரன்(60). இவா் கடந்த 3-ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மனோஜ் மாஞ்ஜி(55) என்பவா் வெங்கல் அருகே நெடுஞ்சாலை பணியின் போது உயிரிழந்தாா். அவரது சடலமும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மனோஜ் மாஞ்சி சடலத்தை பிரேத பரிசோதனை செய்து பிகாருக்கு அனுப்புவதற்கு பதிலாக, திருத்தணியை சோ்ந்த விவசாய கூலி தொழிலாளி ராஜேந்திரன் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து பிகாருக்கு கடந்த 3 -ஆம் தேதி மாற்றி அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, தகவல் அறிந்த ராஜேந்திரன் உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து காவல்துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையால், திருவள்ளூருக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டு உறவினா்களிடம் முதியவா் சடலம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது சடலத்தை மாற்றி அனுப்பிய மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க புகாா் அளித்தனா்.

இது குறித்து விசாரணை அறிக்கை அனுப்பி வைக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது. மருத்துவமனை முதல்வா் தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைத்து விசாரணை செய்து அறிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பினா். அதன் அடிப்படையில், பெண் மருத்துவா் கிருஷ்ணாஸ்ரீ என்பவரை, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநா் சங்குமணி உத்தரவிட்டுள்ளாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com