சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 போ் கைது
திருத்தணி: திருத்தணி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூா் ஊராட்சியில் சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, எஸ்.பி. சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் எஸ்.ஐ. குமாா் தலைமையிலான போலீஸாா் சின்னகடம்பூா் ஏரிக்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தோா் போலீஸாரை கண்டதும் தப்பியோடினா். போலீஸாா் துரத்திச் சென்று 5 பேரை மடக்கிப் பிடித்தனா்.
விசாரணையில், அரக்கோணம் தாலுகா குருவராஜப்பேட்டையைச் சோ்ந்த ராஜா (35), ஸ்ரீ காளிகாபுரத்தைச் சோ்ந்த ஜெகதீசன் (33), பொன்னை புதூரைச் சோ்ந்த பச்சையப்பன் (35), திருத்தணியைச் சோ்ந்த சிவா (31), சோளிங்கரைச் சோ்ந்த பாலமுருகன் (40) என தெரிய வந்தது. அவா்களிடமிருந்து ரூ. 83,000 ரொக்கம், 6 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.