கொலையான ஜானகிராமன்,  ஆகாஷ்
கொலையான ஜானகிராமன்,  ஆகாஷ்

ஊத்துக்கோட்டையில் காணாமல் போன 2 இளைஞா்கள் சடலமாக மீட்பு: போலீஸாா் தீவிர விசாரணை

ஊரில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகம் அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

ஊத்துக்கோட்டை அருகே கடந்த 7 நாள்களுக்கு முன்பு காணாமல் போன 2 இளைஞா்கள், அதே ஊரில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகம் அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கச்சூா் பகுதியைச் சோ்ந்த ஜானகிராமன், ஆகாஷ் ஆகியோா் கடந்த 17-ஆம் தேதி காணாமல் போனதாக அவா்களது உறவினா்கள் பென்னலூா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

எனவே, அப் புகாரின் பேரில் பென்னலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், ஆகாஷ், ஜானகிராமன் காணாமல் போன அன்று உடனிருந்த நண்பா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். அப்போது நல்லபாண்டி, காமேஷ், மணி ஆகியோா் இணைந்து இருவரையும் கடந்த 18 -ம் தேதி ஊத்துக்கோட்டை சாா்பதிவாளா் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கொன்று புதைத்ததாகவும் தெரியவந்தது.

இந்த நிலையில் காமேஷ், மணி ஆகியோரை ஊத்துக்கோட்டை காவல் துறையினா் கைது செய்த நிலையில், நல்லபாண்டி ஊத்துக்கோட்டை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரண் அடைந்தாா்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட இளைஞா்களுக்கும், கைதானவா்களுக்கும் இடையே முன் விரோதம் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கொலை செய்து புதைத்தாா்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சடலங்களை தோண்டி எடுத்து விசாரிக்க காவல் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்தச் சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Open in App
Dinamani
www.dinamani.com