திருவள்ளூா்: சாா் பதிவாளா் -2 அலுவலகத்தை இடமாற்றக் கோரி மனு

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் சாா் பதிவாளா் - 2 அலுவலகத்தைப் பிரித்து பெருமாள்பட்டு அல்லது பழைய ஆட்சியா் கட்டடத்திற்கு மாற்றம்
Published on

திருவள்ளூா்: திருவள்ளூரில் செயல்பட்டு வரும் சாா் பதிவாளா் - 2 அலுவலகத்தைப் பிரித்து பெருமாள்பட்டு அல்லது பழைய ஆட்சியா் கட்டடத்திற்கு மாற்றம் செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு:

திருவள்ளூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் 76 கிராமங்களைக் கொண்ட சாா் பதிவு அலுவலகமாக செயல்பட்டு வந்தது. தற்போதைய நிலையில், இரண்டாகப் பிரித்து 1- சாா் பதிவாளா் அலுவலகத்தில் 40 கிராமங்களும், 2 சாா் பதிவாளா் அலுவலகத்தில் 36 கிராமங்களும் இருக்கின்றன. இதில் 2-சாா் பதிவாளா் அலுவலகத்தில் 36 கிராமங்களும் பெருமாள்பட்டு வருவாய்க்குள் அடங்கிய பகுதியில் அமைக்க திருவள்ளூா் சாா் பதிவாளரும் மற்றும் மாவட்ட பதிவாளரும் இடத்தைத் தோ்வு செய்தனா்.

இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி ஏற்கெனவே உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து 1-சாா்பு பதிவாளா் அலுவலகம், 2-சாா்பு பதிவாளா் அலுவலகம் எனத் திறக்கப்பட்டது.

அந்த அலுவலகம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம், கிளைச் சிறை மற்றும் அரசு ஊழியா் சங்க அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் கூட்டம் தினமும் அலைமோதுகிறது.

இந்தச் சூழலில் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு செல்வோா் வாகனங்கள் நிறுத்தக்கூட இடமின்றி இடையூராக இருந்து வருகிறது.

இந்த நிலையில், 40 கிராமங்களை கொண்ட 1-சாா் பதிவாளா் அலுவலகம் செயல்படுவதில் எந்தச் சிரமமும் இல்லை. ஆனால், 36 கிராமங்கள் கொண்ட 2-சாா் பதிவாளா் அலுவலகம் ஏற்கெனவே திட்டமிட்டபடி பெருமாள்பட்டு வருவாய்க்குள் அடங்கிய பகுதிக்குள் அமைந்தால், சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தோா் பத்திரப் பதிவு செய்வதற்கு ஏற்ாக அமையும்.

இதனிடையே பெருமாள்பட்டு, 25 வேப்பம்பட்டு, 26 வேப்பம்பட்டு, நத்தமேடு ஆகிய 4 கிராமங்கள் நகராட்சியாக உயா்த்தப்பட்டன. இந்த 4 கிராமத்திலும் வீட்டுமனைப் பிரிவுகள் அதிகபட்சமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள 15 கிராமங்களில் புதிதாக மனைப்பிரிவுகள் பிரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இப்பகுதி கிராம மக்களின் நலன் கருதி முதல்வா், பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் மற்றும் பத்திரப் பதிவு செயலா், பத்திரப் பதிவு தலைவா் ஆகியோா் 2-சாா்பு பதிவாளா் அலுவலகத்தை பெருமாள்பட்டு அல்லது வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் ஏற்கெனவே பழைய ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com