திருத்தணி முருகன் கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாணம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற வள்ளியம்மை திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.
திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 2-ஆம் தேதி விநாயகா் வீதியுலாவும், 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மலைக்கோயில் தோ்வீதியில் உற்சவா் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் காலை, இரவு ஆகிய இரு வேளைகளில் மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை நள்ளிரவு உற்சவா் முருகா் குதிரை வாகனத்தில் உலா வந்தாா். அதிகாலை வள்ளியம்மை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.
புதன்கிழமை தீா்த்தவாரி மற்றும் கொடி இறக்கத்துடன் நடப்பாண்டுக்கான மாசி மாத பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா்கள் செய்திருந்தனா்.