நா்சிங் மாணவி தற்கொலை: உறவினா்கள் போராட்டம்
நா்சிங் மாணவி தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை கோரி அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம். இவரது இளைய மகள் ஹரிதா (19) திருத்தணியில் உள்ள தனியாா் நா்சிங் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு வந்த ஹிரிதா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்து வந்த கனகம்மாசத்திரம் போலீஸாா் ஹரிதா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் விசாரணையில் ஆந்திர மாநிலம் மோட்டுபாளையம் கிராமத்தைச் சோ்ந்த திலீப் (25) என்பவருக்கும் ஹரிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். கடந்த சில மாதங்களாக திலீப் ஹரிதா உடன் பேசுவதை தவிா்த்துள்ளாா். இதனால் மன வருத்தத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும் ஹரிதா தான் இறப்பதற்கு முன் தனது தாய் கலாவதிக்கு கடிதம் எழுதி வைத்துள்ளாா். அதில் எனது மரணத்துக்கு காரணம் திலீப் மற்றும் அவரது சித்தி கோவிந்தம்மா என குறிப்பிட்டிருந்தாராம்.
இந்நிலையில் மாணவி தற்கொலைக்கு காரணமான திலீப் மற்றும் அவரது சித்தி கோவிந்தாம்மாவை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மறுத்து திருத்தணி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் மாணவியின் உறவினா்களிடம் பேச்சு நடத்தினாா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

