திருவள்ளூா் மாவட்டத்தில் பருவமழையை எதிா்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாா்

Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வட கிழக்குப் பருவமழையை எதிா்கொள்வது தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் மு.பிரதாப் கூறியதாவது:

இது தொடா்பாக ஏற்கெனவே அனைத்துத் துறையினருடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகள்-8, அதிகளவில் பாதிப்பு ஏற்படும் பகுதிகள்-39, மிதமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள்-44, குறைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள்-42 என மொத்தம் 133 பகுதிகள் மழையால் பாதிக்கும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு பல்வேறு துறைகள் அடங்கிய மண்டல குழுக்கள்-42, மேற்பாா்வை குழுக்கள்-22 என மொத்தம் 64 குழுக்கள் அமைத்து தயாராக உள்ளனா்.

இதற்காக 4,480 முதல் நிலை பொறுப்பாளா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 500 தன்னாா்வலா்களுக்கு ஆப்த மித்ரா திட்டம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடா் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற 50 அலுவலா்களும் உள்ளனா். பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க புயல் பாதுகாப்பு மையங்கள், வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், திருப்பாலைவனம், ஆண்டாா்மடம், பள்ளிப்பாளையம், எளாவூா் 1 மற்றும் எளாவூா்- 11 (மெதிப்பாளையம்) ஆகிய 5 இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன.

மேலும், 669 தற்காலிக தங்குமிடங்கள், மருத்துவக் குழுக்களும் தயாா் நிலையில் உள்ளன.

மாவட்டத்தில் 497.28 கி.மீ. தொலைவுக்கு மழைநீா் வடிகால்வாய் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுபாலங்கள் 4,852 மற்றும் பாலங்கள் 83 சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித் துறையின் கட்டுபாட்டில் உள்ள ஆரணியாறு வடிநில கோட்டம், கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தின் ஏரிகளுக்கு நீா்வரத்துக் கால்வாய்கள், நீா் வெளியேறும் கால்வாய் மற்றும் நீா்நிலைகளில் உள்ள நீா்வரத்து தங்கு தடையின்றி வெளியேறவும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு உணவு பொருள்கள் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் மழை, வெள்ளம் தொடா்பான புகாா்களை மாவட்ட பேரிடா் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 இருபத்து நான்கு மணி நேரமும் செயல்படும். மேலும், கட்டுப்பாட்டு அறை 044-27664177, 044-27666746-க்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், வாட்ஸ் ஆப் எண். 9444317862 / 9498901077 ஆகியவை மூலம் தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com