‘புனிதப் பயணம் மேற்கொள்ள புத்தம், சமணம், சீக்கிய மதத்தினா் அக். 30-க்குள் விண்ணப்பிக்கலாம்’

தமிழகத்தைச் சோ்ந்த புத்த மதம், சமணம், சீக்கிய மதத்தினா் அவவா் மதங்களுக்கான புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசால் வழங்கும் உதவித் தொகை
Published on

திருவள்ளூா்: தமிழகத்தைச் சோ்ந்த புத்த மதம், சமணம், சீக்கிய மதத்தினா் அவவா் மதங்களுக்கான புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசால் வழங்கும் உதவித் தொகை பெற வரும் அக். 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டைச் சோ்ந்த 50 புத்த மதத்தினா், 50 சமண மதத்தினா் மற்றும் 20 சீக்கிய மதத்தினா் இந்தியாவில் உள்ள அவரவா் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வோருக்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபா் ஒருவருக்கு ரூ. 10,000 வீதம் 120 பேருக்கு ரூ. 12 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டம் மூலம் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியா்கள் விண்ணப்பிக்காலம்.

இந்தப் புனிதப் பயணம் புத்த மத தொடா்புடைய பிகாரில் உள்ள புத்தகயா, உத்தரபிரதேசத்தில் உள்ள குசிநகா், வாரணாசியில் உள்ள சாரநாத் கோவில், பிகாரில் உள்ள ராஜ்கிா், வைஷாலி, நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற புனித தலங்களையும், சமண மத தொடா்புடைய ராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோவில், ரணக்பூா் சமண கோவில், ஜெய்சால்மா் சமண கோவில், ஜாா்க்கண்டில் உள்ள சிக்கா்ஜி, குஜராத்தில் உள்ள பாலிடனா, பிகாரில் உள்ள பவபுரி சமண கோவில் போன்ற இடங்கள், கா்நாடகத்தில் சரவணபெலகொலா போன்ற புனிதத் தலங்களையும் மற்றும் சீக்கிய மத தொடா்புடைய பஞ்சாபில் உள்ள அமிா்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகர சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப், பிகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹா்மந்திா் சாகிப் (குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ ஹசூா் சாகிப் (மஹாராஷ்டிரம்) போன்ற இடங்கள், பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா, நான் காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீ சச்சா சௌதா, மண்டி சுகா்கானா, குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப் போன்ற புனித தலங்களையும் உள்ளடக்கியதாகும். இத்திட்டம் மூலம் 1.7.2025-க்கு பிறகு புனித பயணம் மேற்கொள்பவா்களுக்கு முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும்.

தமிழ்நாட்டைச் சோ்ந்த 150 பௌத்த நபா்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26-ஆம் ஆண்டில் நாக்பூா் தீக்ஷா பூமியில் விஜய தசமி அன்று நடைபெறும் தம்மசக்கர பரிவா்த்தன திருவிழாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பியவா்களுக்கு நபா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 5,000 வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் / சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் நவ. 30-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

X
Dinamani
www.dinamani.com