பெருங் கற்படைக் காலம் (இரும்புக் காலம் முதல் சங்க காலம் வரை – 3)
By ச. செல்வராஜ் | Published On : 27th November 2015 10:00 AM | Last Updated : 26th November 2015 04:36 PM | அ+அ அ- |

புதிய கற்காலத்தில் இருந்து பெருங் கற்கால மக்கள் அடைந்த வளர்ச்சிகள்
இறந்தவர்களை முறையாக குழி தோண்டிப் புதைக்கும் பழக்கம் துவங்கியது.[1]
வாழ்விடத்தையும் இடுகாட்டையும் வெவ்வேறு இடங்களில் அமைத்துக்கொண்டனர். இறந்தவர்களை ஊர் இருக்கைகளுக்குத் தெற்கே அல்லது வறண்ட மேட்டு நிலங்களில் புதைத்துள்ளனர். இதன் காரணமாகவே, பெருங் கற்படைச் சின்னங்கள் மேடான இடத்தில் காணப்படுகின்றன என குறிப்பிடுகிறார் அலெக்சாண்டர் ரீ அவர்கள்.[2]
இறந்தவர்கள் மீண்டும் வாழத்துவங்குவர் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால், இறந்தவர்களைப் புதைத்த இடத்திலேயே அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் வைத்து அடக்கம் செய்தனர்.[3]
புதைத்த இடத்தை நினைவு கூற, அந்த இடத்திலேயே ஒரு பெரிய நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தினர். சின்னத்தின் கிழக்கு அல்லது மேற்கு பகுதியில் இடுதுளை ஒன்றை அமைத்தனர். ஒரு கூட்டத்தார், ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து, தம் கூட்டத்தாரை அருகருகே புதைத்தனர்.[4]
இறந்தவர்களை, அதாவது தம் முன்னோர்களை வழிபடும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.[5] தாய் தெய்வ வழிபாட்டுக்கு முதலிடம் வழங்கப்பட்டது. அதற்கு வளமைச் சடங்கு என்ற வழிபாட்டு விளக்கம் முன்வைக்கப்பட்டது.
தங்களது மூதாதையர்களுக்கு எழுப்பும் நினைவுச்சின்னங்கள் மூலம் தமிழகத்துக்குக் கட்டடக் கலையை அறிமுகப்படுத்தினர். இவர்கள் எழுப்பிய சின்னங்களில், சிறிய சிறிய கற்பலகைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கட்டடம் கட்டும் முறையைக் (Structural) காணமுடிகிறது.[6]
பெருங் கற்படைக் கால மக்கள்தான், முதன்முதலாகத் தங்களது பயன்பாட்டுக்காக வனைந்த மட்கலன்களில் அடையாளங்களைப் பதித்தனர். அதாவது தங்களது அடையாளங்களைப் பதிவு செய்தனர். அதுவே குறியீடுகள் என்று வரலாற்று வல்லுநர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் குறிப்பிட்டனர். அவையே, வரலாற்றின் துவக்கக் காலத்தில் எழுத்துக்களாகப் பரிணமித்தன எனலாம்.
பெருங் கற்படைக் கால மக்கள் தங்களது அன்றாட நிகழ்வுகளையும், தாங்கள் கண்டவற்றையும், செய்தவற்றையும் தாம் தங்கியிருந்த பாறைகளிலும், குகைகளின் உட்புறம் மேல்பகுதியிலும், கற்பதுக்கைகள் அமைக்க பயன்படுத்திய பலகைக் கல்லிலும், உட்பகுதியிலும் வண்ணங்களைக் கொண்டு வரைந்து தங்களது எண்ணங்களைப் பதிவு செய்துள்ளனர். வெள்ளை, சிவப்பு, காவி நிறங்களை இதற்குப் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில், இவ்வண்ணங்கள் கொண்டு வரைந்த ஓவியங்கள் மட்டும் ஏராளமாகக் கிடைத்துள்ளன என்பது வரலாற்றுக்கு ஒரு இன்றியமையாத செய்தியாகும். தமிழகத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில், குறிப்பாக பெருங் கற்படைக் கால மக்கள் தம் எண்ணங்களை ஓவியங்களாக வரைந்து பதிவு செய்துள்ள பல தமிழகப் பாறை ஓவியங்கள் குறித்து வரும் அத்தியாயங்களில் விரிவாகக் காணலாம்.
நாகரிகத்தின் முதற்கட்டமாக, இவர்கள் தூய்மை கருதி இறந்தவர்களை மண்ணிலிட்டுப் புதைத்தனர். குழுக்கூட்டமாக வாழ்ந்த இவர்கள், தங்களது குழுக்கூட்டத்துக்கு ஏற்ப புதைக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், கல்வட்டம் காணப்படும் இடத்தில், கல்வட்ட நினைவுச் சின்னங்களே நிறைந்து காணப்படுகின்றன. மேலும், தங்களது தலைவனின் நினைவுச்சின்னத்தை சற்று பெரிய அளவில் அமைத்து மகிழ்ந்தனர் எனலாம்.[7] கல்பதுக்கை காணப்படும் இடங்களில் கல்பதுக்கைகள் மட்டும் காணப்படுகின்றது. ஒரு சில இடங்களில், அனைத்து வகைகளும் கலந்து காணப்படுவதும் உண்டு[8]. எனவே, பெருங் கற்படைச் சின்னங்களின் அடிப்படையில், இவர்கள் தனித்தனி குழுக்கூட்டங்களாக வாழ்ந்தனர் என்றும் பின்னர் ஒரு குழுக்கூட்டம் மற்றொரு குழுக்கூட்டத்துடன் ஏதோ ஒரு காரணத்துக்காக இணைந்திருத்தல் கூடும் என்று ஊகித்து அறியமுடிகிறது.
சங்க இலக்கியங்கள் காட்டும் பெருங் கற்படைக் கால நினைவுச்சின்னங்கள்
சங்க இலக்கியங்கள், பெருங் கற்படைக் கால நினைவுச் சின்னங்களை ‘பதுக்கை’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றன. “வரம்பு அறியா உவல் இடு பதுக்கை”[9], “வில் இட வீழ்ந்தொர் பதுக்கை”[10], “வம்பப்பதுக்கை”[11], “அஞ்சுவரு பதுக்கை”[12] “மவிர்த்தலைப் பதுக்கை”[13], “பரல் உயர் பதுக்கை”[14], என, இச்சொல் குறித்துப் பல குறிப்புகள் காணப்படுகின்றன. இறந்தவர்களை அடக்கம் செய்ய, தரையின் கீழே குழியை வெட்டி அதில் கற்பலகை கொண்டு கல்லறை அமைக்கும் அமைப்பே ‘பதுக்கை’ என்ற சொல் குறிப்பிடுகிறது. கற்குவை என்ற சின்னம் பற்றியும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. இதனைத் தொடர்ந்து, நெடுங்கல் எழுப்பும் பண்பாடும் தொடர்ந்திருப்பதை அவை எடுத்துக்காட்டுகின்றன. “நெடுநிலை நடுகல்”[15], “பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்”[16], “எழுத்துடை நடுகல்”[17], “நட்டகல்” என பலவகையாக அவற்றை விவரிக்கின்றன.
அக்கால மக்கள் மேற்கொண்ட சவ அடக்கமுறைகளை மணிமேகலை தெளிவாக எடுத்துரைக்கின்றது.
“சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுவோர்
தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர்”
என்று விவரிக்கிறது.[18]
பெருங் கற்படைப் பண்பாட்டு கால நிலை
பெருங் கற்படைக் காலத்தை, ஆய்வாளர்கள் பொ.ஆ. முன் ஆயிரம் எனக்கொள்வர். இப்பண்பாடு பொ.ஆ. நூறு வரை தொடர்ந்தது என்பர். இப்பண்பாடு குறித்து மேற்பரப்பு ஆய்வுகள் பல மேற்கொண்ட பிறகு, ஒப்பீட்டு அளவில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இப்பண்பாட்டின் வெளிப்பாடு உள்ளது என்ற கருத்து மேலோங்குகின்றது.[19] இருப்பினும், தமிழகத்தின் தென்பகுதியில் மட்கலன், அதாவது முதுமக்கள் தாழி மற்றும் தொழில் வளர்ச்சி நிலையிலும், எழுத்தறிவு பெற்ற நிலையிலும் முன்னேற்றம் அடைந்திருந்தது எனலாம். வடபகுதியில் கற்பலகைகளைக் கொண்ட நினைவுச்சின்னங்களை அமைக்கும் வழக்கமும், கட்டடக் கலையில் தேர்ச்சி பெற்ற நிலையும், இரும்பின் பயன்பாடும், மட்கலன் உபயோகமும் நிறைந்து காணப்படுகிறது. வடதமிழகத்தில், மட்கலன்களில் எழுத்துப் பொறிப்புகள் அரிதாகவே காணப்படுகிறது.
அகழாய்வுகள் வழங்கும் தரவுகளைக் கொண்டு காணும்பொழுது, தமிழகத்தில் பெருங் கற்படைப் பண்பாட்டைப் போன்றே, இந்தியாவின் பிற பகுதிகளிலும், கிழக்காசிய நாடுகளிலும் பெருங் கற்காலப் பண்பாடு, இரும்பு உற்பத்தியோடு தொடர்புடையதாக இருக்கிறது. இதன் காலத்தை, பொ.ஆ.மு.1000 முதல் பொ.ஆ. 100 வரை குறிக்கலாம் என்று என்.ஆர்.வெங்கட்ராமன் கூறுகிறார்.[20] அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள், தமிழகத்தில் பொ.மு.ஆ.1500 முதலே பெருங் கற்படைப் பண்பாடு காணப்பட்டதை தெரிவிக்கின்றன.
இக்காலத்தில் குறிஞ்சி, முல்லை நிலங்களில் கால்நடை வளர்ப்பும், மேய்த்தல் தொழிலும், வேளாண் தொழிலும் செழிப்புற்றன. அதே சமயத்தில், வேடையாடுவதும் தொடர்ந்தது. கால்நடை மேய்த்தல் பாதைகளே பின்னர் பெருவழிப் பாதைகளாக மாறின. மருதம், நெய்தல் நிலப்பகுதிகளில் அதிக அளவு வேளாண் தொழிலும், அதன் தொடர்ச்சியாக ஊர், நாடு, மண்டலம் பின்னர் அரசு உருவாக்கம் என வளர்ச்சி அடையும் நிலைகளைக் காணமுடிகிறது. இவ்விரண்டு (குறிஞ்சி-முல்லை மற்றும் மருதம்-நெய்தல்) நிலைகளிலும், வெவ்வேறு வகைப்பட்ட அரசு உருவாக்கங்கள் தோன்றின.
தென் தமிழகத்தில் பெருங் கற்படைக் காலம்
பாண்டி நாட்டில்தான் முச்சங்கங்கள் இருந்தன என்று சங்க இலக்கியம் குறிப்பிடுவதும், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் தொன்மையான எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் கிடைப்பதும் குறிப்பிடத்தகுந்தது. இப்பகுதியில் காணப்படும் பெருங் கற்படைச் சின்னம், பெரிதும் முதுமக்கள் தாழி மற்றும் ஈமப்பேழை வகையுமே அகும்.[21] இதனை, இப்பகுதி ஊர்களான ஆதிச்சநல்லூர், மாங்குடி, பொருந்தல், தாண்டிக்குடி (கல்வட்டம்), துவரைமான், கோவலன்பொட்டல், பொருந்தல் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுச் சான்றுகளும் மெய்ப்பிக்கின்றன. தேனி மாவட்டத்தில் மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள், ஏராளமான சங்க கால ஊர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.[22] மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் உற்பத்தியாகும் வைகை ஆற்றின் கிளை நதிகளான முல்லையாறு, சுருளியாறு பாய்கின்ற வளமையான கம்பம் பள்ளத்தாக்கில், பெரும்பாலும் முதுமக்கள் தாழிகளே காணப்படுகின்றன. [23]
வட தமிழகத்தில் காணப்படும் பெருங் கற்படைக் காலப் பண்பாடு
வட தமிழகம் என்பது கோவை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, மாவட்டங்களையும் நடுநாட்டுப் பகுதிகளையும் கொண்டதாகும். இங்கு காணப்படும் பெருங் கற்காலப் பண்பாட்டுக்கூறுகள் குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பாலும், இப்பகுதி குறிஞ்சி மற்றும் முல்லை நிலப் பகுதிகளைக் கொண்டதாகும். தகடூர் (தருமபுரி) என சங்க காலத்தில் அழைக்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதி, இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் புறமலை நாடு என்று குறிப்பிடப்படுவதைக் காணலாம்.[24] இது மலைகள் சூழ்ந்த நாடு என்று பொருள்படுவதாகும். மலைகளால் சூழப்பட்ட இப்பகுதிகளில், ஏராளமான கல்திட்டைகளும்,[25] கல்பதுக்கைகளும்[26] கல்வட்டங்களும்[27] குத்துக்கல்[28] வகைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. வட தமிழகம், ஆந்திரம் மற்றும் கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால், பண்டைய காலத்தில் இப்பண்பாட்டின் தாக்கம் இப்பகுதிகளில் அதிக அளவில் காணப்படுவதை அறிய முடிகிறது.
இன்றைய எல்லைப் பிரிவை நோக்காமல், பண்டைய நிலையில் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த மூன்று மாநிலங்கள் அமைந்த நிலப்பரப்பில்தான் ஒரு பரந்த அளவில் பெருங் கற்படைப் பண்பாட்டைத் தழுவிய மக்கள் கூட்டமாக வாழ்ந்துள்ளனர் என்பதை தெளிவாக உணரலாம்.
தொண்டை நாட்டுப் பகுதிகளான கொற்றலையாற்றுப் படுக்கையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, காஞ்சிபுரம், ஆற்காடு, வேலூர், தருமபுரிப் பகுதிகள், பழைய கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம் அதனைத் தொடர்ந்து பெருங் கற்படைக் காலம் என தொல்லியல் தடயங்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறன. மேலும், இப்பகுதிகளில் தொடர்ந்து மக்களின் வாழ்க்கை நடந்து வந்துள்ளது என்பதை இங்கு மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மூலம் கிடைத்துள்ள சான்றுகள் உறுதி செய்கின்றன.
பெருங் கற்படைக் காலம் குறித்த செய்திகள், சங்க கால இலக்கியங்களில் அதிக அளவில் கிடைக்கின்றன. பதுக்கை என்ற சொல், இறந்துபட்ட வீர்ர்களுக்கு எடுக்கப்பெற்ற ஈமச்சின்னத்தையே குறித்து நிற்கின்றன. இச்சங்க இலக்கியங்கள் மதுரையில்தான் தொகுக்கப்பெற்றன என்பதால், பெருங் கற்படைக் காலம் முதலில் தென்பகுதியில்தான் தோன்றியிருத்தல் வேண்டும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் இலக்கியங்கள் தெரிவிக்கும் மிகப்பெரிய கற்பலகைகளைக் கொண்டு எழுப்பப்பட்ட பெருங் கற்படைகள், வட தமிழகத்தில்தான் அதிக அளவிலும் கூட்டமாகவும் தொகுப்பாகவும் காணமுடிகிறது. இதனால், இப்பண்பாடு வட பகுதியில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் தமிழர் வீரம் குறித்த நடுகற்கள், ஆநிரை காத்தல், ஆநிரை மீட்டலுக்கு உரிய கல்வெட்டுச் சான்றுகளும், நடுகல் சான்றுகளும் வட தமிழகத்தில் மிக அதிகமாகக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். நடுகல் பண்பாடு பெருங் கற்படைப் பண்பாட்டின் குத்துக்கல் வகையில் இருந்து வளர்ந்த நினைவுச்சின்ன வகை என்பது நினைவுகூரத்தக்கது.
பெருங் கற்படைப் பண்பாடு பரவல் பற்றிய நிலைப்பாடுகள்
வட தமிழகத்திலிருந்து அவை தென் தமிழகத்துக்குச் சென்றதா அல்லது தென் தமிழகத்தில் இருந்து வட தமிழகத்துக்கு வந்ததா என்ற ஐயப்பாட்டை நீக்கிவிட்டு, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் வளர்ச்சியை அதன் நிலவியல் அமைப்பைக் கொண்டும், ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் தரவுகளின் அடிப்படையிலும் பார்க்கும்பொழுது, பெருங் கற்படைக் காலத்தில் தமிழகத்தின் வட பகுதியில் கட்டடக் கலையும், அதே சமயத்தில் தென் தமிழகத்தில் தொழிற்பட்டறைகளும் எழுத்தறிவும், வணிகமும் பெருகின எனலாம். எழுத்தறிவு பெற்றதற்கான தடயங்களாக, எழுத்துப் பொறிப்புள்ள மட்கலன்கள் தென் தமிழகத்தில் பெருங் கற்கால வாழ்விடங்களில் அதிக அளவில் கிடைத்து வருவதே ஆகும். இந்நிலை, சங்க காலத்தின் தோற்றமும், அதாவது தமிழக வரலாற்றுக் காலத்தின் துவக்கமும் ஆகும்.
இப்பண்பாடு, தமிழகம் முழுவதும் சமகாலத்தில் பரவியிருத்தல் வேண்டும். ஏனெனில், வட தமிழகத்தில் முதுமக்கள் தாழி வகைப் பண்பாடு, கற்பதுக்கை பண்பாட்டோடு கலந்தே காணப்படுகிறது.[29] எனவே, தென் தமிழகத்தில் குறைந்த அளவே காணப்பட்ட இப்பண்பாடு, வட தமிழகத்தில் முதுமக்கள் தாழியுடன் கல்பதுக்கையும் இணைந்து காணப்படுகிறது. மேலும், இங்கு கிடைக்கக்கூடிய கற்களையும் இணைத்து, இடத்துக்கு ஏற்ப பாதுகாப்பின் பலனாக கற்பலகைகளையும் அமைத்துப் பயன்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது.
தென் தமிழகத்தில் குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம்[30], புதுக்கோட்டை மாவட்டம் (கல்வட்டம், கற்பதுக்கை, முதுமக்கள் தாழி) திருமயம் போன்ற இடங்களில் மேற்கொண்ட ஆய்வில், நுண் கற்காலப் பண்பாட்டினைத் தொடர்ந்து இரும்புக் காலப் பண்பாட்டுச் சான்றுகளையே அதிகளவில் காணமுடிகிறது.[31] புதுக்கோட்டை பகுதியில் மட்டும், அதிக அளவில் கல்திட்டைகள் காணப்படுகின்றன. குறிப்பாக சித்தன்னவாசல், சூரணிப்பாடி, சூரந்தப்பட்டி, தச்சன்பட்டி, தொடையூர், முத்துக்காடு, கலியப்பட்டி, களக்குடிப்பட்டி போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். இப்பகுதியில் உள்ள கல்திட்டைகள், மைய அரசால் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மேல்சேவூர் போன்ற இடங்களில் முதுமக்கள் தாழி வகைகளைக் காணமுடிகிறது.[32] எனவே, தென் தமிழகத்தில் புதிய கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள் குறைவே எனலாம். தென் தமிழகத்தில் குறிப்பிடும்படியாக அமைந்தது, ஆதிச்சநல்லூர். இதனைத் தொடர்ந்து நாகை, தஞ்சை புதுக்கோட்டை, மதுரை போன்ற மாவட்டங்களிலும் முதுமக்கள் தாழி வகையைச் சார்ந்த பண்பாடே மேலோங்கி நிற்கிறது.
இவை, இப் பண்பாடு சம காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் நல்ல நிலையில் வளர்ச்சி பெற்றே திகழ்ந்துள்ளது என்ற கருத்தை வலியுறுத்துகின்றன.
அண்மைக் காலங்களில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், தமிழ்ப் பல்கலைக் கழகமும் பல மேற்பரப்பு கள ஆய்வுகள், அகழாய்வுகள் மேற்கொண்டு, பல புதிய தகவல்களை வழங்கியதன் அடிப்படையில், தமிழகத்தின் பெருங் கற்காலத்தைப் பற்றிய உண்மை நிலையை வெளிப்படுத்த முடிகிறது.[33]
தொழில்நுட்ப வளர்ச்சி
தாண்டிக்குடி, பொருந்தல் அகழாய்வுகள், பெருங் கற்படைக் காலத்தில் ஏற்பட்ட எழுத்தின் வளர்ச்சியும், தாண்டிக்குடியில் காணப்பட்ட கல்மணிகளும் குறிப்பிடத்தக்கவையாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர், உக்கிரன்கோட்டை, கீழ்நத்தம் போன்ற இடங்களிலும், மதுரை மாவட்டத்தில் கலக்காடு என்ற இடத்திலும், தாழியில் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது என ஆர்.வெங்கட்ராமன் தெரிவிக்கின்றார். இப்பகுதியில், கல்மணிகள் தயாரித்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் கிடைத்திருப்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
இக்கால மக்கள், தொழிற்பட்டறைகள் பல உருவாக்கினார்கள். குறிப்பாக, பல்வேறு விதமான மணிகள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள், இரும்புத்தாது உருக்குதல், இரும்புத்தாதுவை பிரித்தெடுத்தல், இரும்புக் கருவிகள் தயாரித்தல் எனப் பலவகையான தொழிற்கூடச் சான்றுகள் அகழாய்வுகளில் வெளிக் கொணரப்பட்டுள்ளன.
(அகழாய்வில் கிடைத்த கல்மணிகள். இடம் – பொருந்தல், தாண்டிக்குடி)
இக்கால மக்கள், இரும்பு உலோகத்தின் பயன்பாட்டைக் கண்டறிந்து அதனைப் பயன்படுத்தத் துவங்கினர். இக்காலத்திய இரும்புக் கருவிகள், அதிக அளவில் புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இப் பண்பாட்டுக் காலத்தை இரும்புக் காலம் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் பகுத்துக் கூறுகின்றனர்.
(கொடுமணல் அகழாய்வில் கிடைத்த இரும்புக் கருவிகள்)
(ஊதுளைகள் அகழாய்வில் வெளிப்படுத்தப்படும் காட்சி - கொடுமணல்)
இரும்பின் பயன்பாட்டை அறிந்த இம்மக்கள், தமிழகம் முழுவதும் பரவலாக அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுத்துப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தனர்.[34] இரும்பின் பயனை அறிந்த பின்பு, பெருங் கற்படைக் கால மக்கள், முழுவதும் தங்களது முன்னேற்றத்தை ஒருமுகப்படுத்தியும் எடுத்துச் சென்றுள்ளனர்.
உருக்கு உலை அல்லது புடைக்குகை (Crucible)
கனிம உலோகங்களை உருகவைக்கும் மட்கலன், உருக்கு உலை அல்லது புடைக்குகை ஆகும். இரும்புத்தாதைக் கண்டறிந்த நம் முன்னோர்கள், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மிகவும் தெளிவாகச் சிந்தித்து செயல்படுத்தியுள்ளவிதம் போற்றுதலுக்கு உரியதாக உள்ளது. சாதாரணமாகக் கிடைக்கும் இரும்புத்தாதுவில், காரியம் அளவு சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் குறைவாகவும் காணப்படுகின்றன. இதனை சமச்சீராகப் பயன்படுத்தினால்தான், அது பயன்படுத்தப்படக்கூடிய இரும்பாக மாற்றம் பெரும். எனவே, கடின இரும்பு (Wootz iron) செய்யவும், மெல்லிரும்பு (Wrought iron) செய்யவும் இந்த உருக்கு உலை பயன்படுத்தப்பட்டது. தூய்மையான பிற கனிமங்கள் மிகக் குறைவாகக் கலந்துள்ள, எளிதில் துருப்பிடிக்காத இரும்பாக மாற்றம் செய்ய இந்த உருக்கு உலைகளைப் பயன்படுத்தினர். இவை, மண்ணால் செய்யப்படும் மட்கலன் வகைகளில் ஒன்றாகும். அக்கால மக்கள், மட்கலன்கள் கொண்டே தங்களது தொழிலுக்குத் தேவையானவற்றை செய்து பயன்படுத்தினர், அவ்வாறு உருவானதுதான் உருக்கு உலை (Crucible) ஆகும். இவற்றில் இரும்புத்தாதுவை உருக்கி ஊற்றுவர். தாதுவில் உள்ள அதிகப்படியன காரியத்தை (Corbon) நீக்கி சுத்தமான இரும்பை பிரித்தெடுக்க, பிரத்தியேகமாக வடிவமைத்த கருவியாகும்.
சங்க இலக்கியங்களில், உலை (பெரும்பாணாற்றுப்படை 206, 207), உலைக்கூடம் (புறம் 170) சொற்கள் குறிப்பிடப்படுகின்றன. மேலும், சங்க இலக்கியங்களில் கொல்லன், துருத்தி, விசைவாங்கி போன்ற பல சொற்கள் பயன்பாட்டில் இருந்துள்ளதைக் காணும்பொழுது, சங்க கால மக்கள் இரும்பை எக்கு வடிவில் மாற்றுவதற்குத் தனித்திறமையும் தனித்துவமும் பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.
அண்மைக்கால அகழாய்வுகளில், அதிக அளவில் உருக்கு உலைகள் கிடைத்து வருவது இக்கருத்தை மெய்ப்பித்துள்ளது. மேலும், பெருங் கற்கால மக்கள் அதிக அளவில் இதனைப் பயன்படுத்தி இருப்பதையும் உணரமுடிகிறது.
உருக்கு உலை அமைப்பு
உருக்கு உலை, நன்கு சுடப்பட்ட மட்கலன்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. இதன் சுவர்ப்பகுதி தடித்தும், நடுவில் சிறியதாக துவாரம் கொண்ட அமைப்புடனும் காணப்படும்.
இதன் மேல்பகுதி வழவழப்பாகவும், பளிங்குக் கற்களின் பளபளப்பு (Vitrified) போன்றும் காணப்படும். இவை நீள் உருண்டை (Cylindrical), முட்டை (Oval), குவளை (Cup) வடிவில் கிடைத்துள்ளன. அகழ்வாய்வுகளில் பெரும்பாலும், நீள் உருண்டை வடிவிலேயே கிடைத்துவருகின்றன. இவை தோராயமாக 24 மி.மீ. முதல் 164 மி.மீ. அளவு நீளமும், 24 மி.மீ. முதல் 154 மி.மீ. வரை விட்டமும் கொண்டு காணப்படுகின்றன.
(தொடரும்)
சான்றெண் விளக்கம் [1]. தமிழ்நாட்டு வரலாறு, தொல் பழங்காலம், தமிழ்நாடு அரசு வெளியிடு, சென்னை, 1975, ப. 199 [2]. B.Narasimahaih, p.108 [3]. Ibid., 109 [4]. K.Rajan, Archaeological Gazetteer of TamilNadu, Manoo pathippagam, Thanjavur. [5]. Ibid., [6]. Ibid., [7]. S.Selvaraj, Archaeology of Krishnagiri District. [8]. K.Rajan, op.cit., [9]. அகநானூறு எண்: 109, வரி-8 [10]. மேலது, எண்: 157. வரி-5 [11]. புறநானூறு, எண்: 3ம் வரி-21 [12]. அகநானூறு எண்: 215, வரி-10 [13]. மேலது, எண்: 231, வரி-6 [14]. மேலது, எண்: 91. வரி-10 [15]. அகநானூறு எண்: 67, வரி-8 [16]. மேலது, எண்: 10. வரி-11 [17]. மலைபடுகடாம், 388.2 [18]. மணிமேகலை, வரி 6-111, 11-66-67 [19]. K.Rajan, op.cit., [20]. R.Venkatraman, Indian Archaeology – A Survey 1985, pp. 119. [21]. K.S.Ramachandran, South Indian Megalithis, New Delhi, 1980, pp. 45. [22]. கா.ராஜன், தொல்லியல் நோக்கில் சங்ககாலம் 2004, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113. [23]. மேலது, ப.13 [24]. ச. செல்வராஜ், தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு, தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு, சென்னை, 2005, ப. 56 [25]. மேலது, ப, 26 [26]. மேலது. [27]. மேலது, ப. 27 [28]. கள ஆய்வில் கண்டறிந்த தகவல், நாள், 9-7-1990 [29]. கள ஆய்வில் கண்டறிந்த தகவல் [30]. A.Gosh. Op.cit 127. [31]. K.S.Ramachandran. Bibliography of Indian Megalithics, Dept. of Archaeology, Chennai [32]. கள ஆய்வில் கண்டறிந்த தகவல் [33]. கா.ராஜன், தொல்லியல் நோக்கில் சங்ககாலம், 2004, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113. [34]. P.K.Gururaj Rao, Megalithic Culture in South India, 1972 pp. 304. |