Enable Javscript for better performance
வரலாற்றுக் காலம் - 9. திருக்காம்புலியூர் – மாளிகைமேடு – திருக்கோயிலூர்- Dinamani

சுடச்சுட

    

    வரலாற்றுக் காலம் - 9. திருக்காம்புலியூர் – மாளிகைமேடு – திருக்கோயிலூர்

    By ச. செல்வராஜ்  |   Published on : 15th April 2016 02:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    திருக்காம்பூர்

    கரூர் மாவட்டத்தில், கரூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில், திருச்சி - ஈரோடு சாலையில், காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது திருக்காம்புலியூர். இது, நீர்வளம் மிக்க செழிப்பான பகுதியாகும்.

    அகழாய்வு

    1962-63-ம் ஆண்டுகளில், சென்னைப் பல்கலைக் கழகம் இப் பழமையான பகுதியை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. இங்குள்ள தொன்மையான மண்மேட்டுப் பகுதிகளில் ஆய்வு செய்ய திட்டமிட்டது. 117 சதுர மீட்டர் பரப்பளவில், மொத்தம் எட்டு அகழ்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது*1.

    கட்டடப் பகுதி

    இங்கு, தானியம் சேமித்துவைக்கப் பயன்படும் கிட்டங்கி ஒன்று வெளிப்படுத்தப்பட்டது. இதன் அடிப்பகுதியும் மேற்பகுதியும் சரளைக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. சுவரின் மேல் பகுதி, சரளைக் கற்களால் செங்கல் சுவர் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அக்கட்டடம் இரண்டு அறைகளாகக் கட்டப்பட்டுள்ளதும் அகழாய்வின் வழியாக வெளிக்கொணரப்பட்டது. அதிக அளவாக, அகழ்வுக் குழி 10-ல், 14 மண் அடுக்குகள் காணப்பட்டன. அகழாய்வில், செங்கற்களால் கட்டப்பட்ட மற்றொரு கட்டடப் பகுதியும் வெளிக்கொணரப்பட்டது.

    pt1.jpg

    அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட, சரளைக் கற்களால் கட்டப்பட்ட கிட்டங்கி

    pt2.jpg

    செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடப் பகுதி

    தொல்பொருட்கள்

    கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், எலும்பினால் ஆன பொருட்கள், செப்பினால் ஆன வளையல்கள், இரும்புப் பொருட்கள், சுடுமண் பொம்மைகள் என பல தொல்பொருட்கள் இவ்வகழாய்வில் கிடைத்தன. ஆண் தலை, உடல் பகுதி மட்டும், தாயும் சேயும், சீமாட்டியின் உருவம் போன்றவை சுடுமண் பொம்மைகளாகக் கிடைத்துள்ளன*2.

    pt3.jpg 

    pt4.jpg

    கல்மணிகளும், சுடுமண் பொருட்களும்

    pt5.jpg 

    pt6.jpg

    இரும்புப் பொருட்களும், சுடுமண் பாவைகளும்

    மட்பாண்டங்கள்

    கறுப்பு சிவப்பு, காவிக்கலவை பூசப்பட்ட கறுப்பு சிவப்பு மட்கலன்கள், பழுப்பு நிற மட்கலன்கள், சிவப்பு நிற மட்கலன்கள் என பல வகையான மட்கலன்கள் பல்வேறு வடிவில் கிடைத்துள்ளன.

    pt7.jpg

    சுடுமண் பொருட்கள் - பொம்மைகள்

    pt8.jpg

    அகழ்ந்தெடுக்கப்பட்ட மட்கலன் ஓடுகள்

    பண்பாட்டுக் காலங்கள்

    இங்கு கிடைக்கப்பட்ட தொல்பொருட்கள் அடிப்படையில், இங்கு மூன்று பண்பாட்டுக் காலங்கள் நிலவியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

    முதல் பண்பாட்டுக் காலம் - மட்பாண்டங்களின் அடிப்படையில், இதன் காலத்தை பொ.ஆ. 100 முதல் பொ.ஆ. 300 வரை கொண்டு செல்லலாம்.

    இரண்டாவது பண்பாட்டுக் காலம் - செங்கற்கள், தொல்பொருட்கள் இவற்றின் அடிப்படையில், இதனை பொ.ஆ. 300 முதல் பொ.ஆ. 1000 ஆண்டுகள் வரை கொண்டுசெல்ல வழிவகுக்கிறது.

    மூன்றாவது பண்பாட்டுக் காலம் – இதனை, கி.பி. 1000 முதல் கி.பி 1500 வரை உள்ன காலமாக வரையறுக்கலாம்.

    இந்த அகழாய்வுகள் வாயிலாக, திருக்காம்புலியூர் பகுதியில், பொ.ஆ. 100 முதல் பொ.ஆ. 1500 வரை, அதாவது விஜயநகரப் பேரரசுக் காலம் வரை, இங்கு மக்களின் வாழ்க்கை முறைகள் சீராகவும் தொடர்ச்சியாகவும் இயங்கி வந்துள்ளன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

     

    மாளிகைமேடு

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகைமேடு உள்ளது. கடலூர் - விழுப்புரம் சாலையில், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தூரத்தில் இந்த ஊர் உள்ளது.

    அகழாய்வின் நோக்கம்

    மாளிகைமேடு என்ற பெயரில் ஊரின் பெயர் அமைந்துள்ளதால், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இருக்கக்கூடும் என்ற கருத்தில், 1998-ல் இப் பகுதியில் மேற்பரப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வூரில் நத்தமேடு என்ற மேட்டுப்பகுதி காணப்பட்டது. அப்பகுதியில் செங்கல் துண்டுகளும், மட்கல ஓடுகளும் அதிக அளவில் காணப்பட்டன. அடுத்து, குறிப்பிடத்தக்க பானை ஓடுகளான ரோமானியர் பானை ஓடுகள் வகையைச் சார்ந்த ரௌலட்டட் வகைகளும் காணப்பட்டன. எனவே, இங்கு அகழாய்வு மேற்கொண்டால் பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்ற அடிப்படையில், 1999-2000-ல் மாளிகைமேடு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அகழ்வுக்குழிகளும் தொல்பொருட்களும்

    மாளிகைமேடு பகுதியில், அறிவியல் முறைப்படி நான்கு அகழ்வுக்குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிக அளவாக, 4.30 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டது. அகழ்வுக்குழிகளில் 5 முதல் 8 வரையிலான மண்ணடுக்குகள் காணப்பட்டன*3.

    பண்பாட்டுக் காலம்

    இங்கு கிடைத்துள்ள தொல்பொருட்களின் அடிப்படையில், மூன்று பண்பாட்டுக் காலங்களில் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துள்ளதை அறியமுடிகிறது.

    முதல் பண்பாட்டுக் காலம் - பொ.ஆ.மு. 300 - பொ.ஆ. 500

    இரண்டாவது பண்பாட்டுக் காலம் - பொ.ஆ. 500 - பொ.ஆ. 1200

    மூன்றாவது பண்பாட்டுக் காலம் - பொ.ஆ. 1200 - பொ.ஆ. 1600

    தொல்பொருட்கள்

    இங்கு ஒன்பது வகையான தொல்பொருட்கள் கிடைத்தன. அவை,  1. செப்பு நாணயங்கள், 2. செப்புச் சிலம்பு, 3. தக்களி, 4. சுடுமண் மணிகள், 5. இரும்பு ஆணிகள். 6. கண்ணாடி மணிகள், 7. காதணிகள், 8. சுடுமண் புகைப்பான்கள் மற்றும் 9. தாயக்கட்டை.

    இத்தொல்பொருட்கள், அடிப்படையில் சங்க காலத்தைச் சார்ந்தவையாகவே தோன்றுகின்றன. தாயம் விளையாடுதல், புராண காலம் முதல் தொடர்ச்சியாக நடைமுறையில் இருந்து வந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. அணிகலன்கள், சங்க காலத் தொடர்பை வெளிப்படுத்துபவையாகவே அமைந்துள்ளன. புகைப்பான்கள், பெரும்பாலும் விஜயநகரப் பேரரசு காலத்தில் அதிகரித்தது எனலாம்.

    பானை ஓடுகள்

    இங்கு, பலவகையான பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அவற்றைக்கொண்டு, இங்கு வாழ்ந்த மக்கள் கொண்டிருந்த அயல்நாட்டு மக்களுடன் கொண்டிருந்த தொடர்பு மற்றும் பிற நாடுகளுடன் புரிந்த வணிகம் பற்றிய செய்திகளைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

    pt9.jpg 

    இங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில், கருப்பு-சிவப்பு, சொரசொரப்பான பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், உள்நாட்டு ரௌலட்டட், ரோமானியர் ரௌலட்டட், எழுத்துப் பொறித்த பானை ஓடுகள், செம்பழுப்பு பூச்சு பூசப்பட்ட பானை ஓடுகள், கீறல் குறியீடு கொண்ட பானை ஓடுகள், வட இந்திய பளபளப்பான கருப்பு நிற பானை ஓடு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இங்கு சாதவாகனர் செப்புக் காசும், பாண்டியர் செப்புக் காசும் கிடைத்துள்ளன*4. இவை, இப்பகுதி மக்கள் வட இந்தியாவோடும், பிற நாடுகளுடனும் கொண்டிருந்த தொடர்பை தெளிவுபடுத்துகின்றன.

    pt10.jpg 

    உறைகிணறும் கட்டடப் பகுதிகளும்

    கட்டடப் பகுதிகள்

    அகழாய்வில், கட்டடப் பகுதிகள் வெளிப்படுத்தப்பட்டன. இங்கு காணப்படும் செங்கல் கட்டடப் பகுதி 110 செ.மீ. ஆழத்தில் உள்ளது. உறைகிணறு ஒன்றும் வெளிப்படுத்தப்பட்டது. இங்கு பயன்படுத்தப்பட்ட செங்கற்களின் அளவுகள் முறையே 45 செ.மீ. X 20 செ.மீ. X 7 செ.மீ. மற்றும் 65 செ.மீ. X 25 செ.மீ. X 5 செ.மீ. ஆகும். இங்கு வெளிக்கொணரப்பட்ட கட்டடப் பகுதியின் நீளம் 3 மீ, அகலம் 0.5 மீட்டர் என்ற அளவில் உள்ளது. எனவே, இங்கு மாளிகை இருந்து அழிந்துபட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

    ஒரு தொடர்ச்சியான வரலாற்றையும், அரண்மனைப் பகுதிகளையும் கொண்டு இந்த மாளிகைமேடு செழிப்புடன் திகழ்ந்துள்ளதை இந்த அகழ்வாய்வு தெளிவுபடுத்துகிறது. உறைகிணறுகள், பெரும்பாலும் சங்க கால வாழ்விட அகழாய்வுகளில் கிடைத்துள்ளதைக் குறிப்பிட்டு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பல்லவமேடு, பூம்புகார், வசவசமுத்திரம், மாங்குடி போன்ற பல அகழாய்வுகளிலும் இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உறைகிணறுகள், பெரும்பாலும் சங்க காலம் முதல் விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக் காலம் வரை தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டவை.

    உறைகிணறுகள், சங்ககாலம் முதல் நமது மக்களின் வாழ்க்கையில் பெரும்பங்கு வகித்துள்ளது. சங்ககாலத்தில், நீர் ஊற்றுகளை அடையாளப்படுத்தி, அங்கு சுடுமண் உறைகளை அமைத்து நீரை எடுப்பதற்காக அவற்றைப் பயன்படுத்தினர். சில இடங்களில், இவற்றையே சற்று அகலமாக அமைத்து, அதனை தானியங்கள் சேகரிக்கவும் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு, காலத்துக்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் அவற்றை நம் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

     

    திருக்கோயிலூர்

    விழுப்புரம் மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது திருக்கோயிலூர். சங்க இலக்கியங்களில், “துஞ்சா முழவரி கோவல்”, “முரன்மிகு கோவலூர்” என்று போற்றப்பட்டது இந்த ஊர். இதன் பொருளாவது, போர் முரசு இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருக்கும் பகுதி என்பதாகும். பல போர்களை இப்பகுதி கண்டுள்ளது. வயல்கள் சூழ்ந்த கோவலூர் என்றும் குறிப்பர். அத்தகு சிறப்புபெற்ற கோவலூர்தான் திருக்கோயிலூர் / திருக்கோவிலூர் ஆகும்.

    சங்ககால மன்னனான மலையமான், இவ்வூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளான். தகடூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த அதியமான் நெடுமான் அஞ்சி, திருக்கோயிலூரை ஆட்சிபுரிந்த மலையமான் திருமுடிக்காரி மீது படையெடுத்து வந்து இந்த நாட்டையும் வென்றதாக சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. அதற்கேற்ப, பொ.ஆ.மு. முதல் / இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டு ஒன்று, திருக்கோயிலூருக்கு அருகே உள்ள ஜம்பை என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்டது. அதில் காணப்படும் வாசகமாவது -

    “சதியபுதோ அதியமான் நெடுமான் அஞ்சி ஈத்த பாலி” என்பது. இதனைக் கொண்டு, திருக்கோயிலூர் வரை அதியமான் வந்துள்ளான் என்றும் திருமுடிக்காரியை போரில் வென்றான் என்பதும் உறுதி ஆகிறது. இவை அனைத்தும் தகுந்த சான்றகளுடன் காணப்படினும், அங்குள்ள மக்களின், அதாவது சங்ககால மக்களின் வாழ்க்கை முறை எவ்வாறு இருந்துள்ளது என்பதையும், பிற தகவல்களையும் அறிந்துகொள்ள தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது.

    அகழாய்வு

    அறிவியல் முறைப்படி இங்கு ஐந்து அகழ்வுக்குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அகழாய்வில் நான்கு வரிசை மண்ணடுக்குகள் கண்டறியப்பட்டன. அத்துடன், இங்கு மூன்று காலகட்ட மக்களும் வாழ்ந்துள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது.

    முதல் பண்பாட்டுக் காலம் - பொ.ஆ.மு. 100 - பொ.ஆ. 400

    இக்கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மட்கலன்களான கருப்பு சிவப்பு மட்கலன்களும், அவற்றுடன் ஆம்போரா, ரௌலட்டட் மட்கலன்களும், குறியீடுகள் பொறித்த மட்கலன்களும் கலந்து காணப்படுகின்றன. எனவே, இத் தொல்லியல் தடயங்களின் அடிப்படையில், இதன் காலத்தை பொ.ஆ.மு. 100 முதல் என்று கணக்கிடலாம்.

    இரண்டாவது பண்பாட்டுக் காலம் - பொ.ஆ. 400 - பொ.ஆ. 1300

    இக்கால கட்டத்துக்கு உரியதாக, மக்கள் பயன்படுத்திய சொரசொரப்பான சிவப்பு நிற மட்கலன்கள், சுடுமண் பொருட்கள், கால்வாய்க் குழாய்கள், சுடுமண் தக்களி, விளையாட்டுப் பொருட்கள், நீள் செவ்வக வடிவ கூரை ஓடுகள், சுடுமண் காதணிகள், சுடுமண் மணிகள், இரும்பு ஆணிகள் என பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

    மூன்றாவது பண்பாட்டுக் காலம் - பொ.ஆ. 1300 - பொ.ஆ. 1700

    இக்கால கட்டத்தில், மக்கள் பயன்படுத்திய தொல்பொருட்களில் சுடுமண் புகைப்பான்கள் மிகவும் இன்றியமையாததாகும். இவற்றுடன், கண்ணாடி வளையல்கள் போன்றவையும் கிடைத்துள்ளன.

    அகழாய்வில் பெறப்பட்ட செய்தித் தொகுப்பு

    திருக்கோயிலூர் அகழாய்வு மூலம் வெளிப்பட்ட செய்தியாக, சங்ககால மக்கள் தங்கள் வாழ்விடங்களில் குடிநீர்க் குழாய்கள் அமைத்து, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தண்ணீரைக் கொண்டுசென்றதும், சுத்தமான நீரை மக்களுக்கு வழங்கிய விதமும் வெளிப்படுத்தப்பட்டது.

    pt11.jpg 

    சுடுமண் குழாய்கள் அமைத்திருந்த விதமும், அதனை ஒன்றோடு ஒன்று பொருந்தும் வகையில் அமைத்த விதமும் பாராட்டும்படுயாக உள்ளது. இந்தப் பகுதியில் இரும்பின் உபயோகம் இருந்துள்ளது. தக்களி கொண்டு நூல் நூற்றுள்ளனர் என்பதை இங்கு கிடைத்த தக்களியின் வாயிலாக உணரமுடிகிறது. சுடுமண் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இங்கு நடுத்தர பொருளாதார வசதி படைத்த மக்களே வாழ்ந்துள்ளனர் என்பதும், விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்த மக்களே அதிகம் இருந்துள்ளனர் என்பதும் அறியமுடிந்தது. மேலும், சில உயர்குடி மக்கள் வணிகம் புரிந்துள்ளதையும் அயல்நாடுகளுடன் தொடர்புகொண்டு வணிகம் புரிந்தமையும் இங்கு கிடைத்த ரோமானிய மட்கலன்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

    எனவே, தமிழகத்தில் சங்ககால மக்கள் வாழ்விடங்களில் பெரும்பாலான ஊர்களில் வணிகம் முக்கியமாக இடம் பெற்றுள்ளது என்பதும், அவ்விடங்களில் எல்லாம் ரோமானியர் வருகை புரிந்துள்ளனர் என்பதும் இவ்வகழாய்வு வாயிலாக வெளிப்படுகிறது எனலாம். பொ.ஆ. 17-ம் நூற்றாண்டில், போர்த்துகீசியர்களின் வருகையின்போது புகைப்பழக்கமும் அதிகரித்தது எனலாம். மொகலாயர்கள் காலத்திலும், விஜயநகரப் பேரரசு காலத்திலும் மக்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

    மேற்கோள் எண் விளக்கம்

    1. K.V. Raman, Excavations at Thirukkampuliyur.

    2. Ibid.,

    3. T.S. Sridhar, Archaeological Excavations in Tamil Nadu, Vol-2, Govt. of Tamil Nadu, Dept. of Archaeology, 2012.

    4. Ibid.,

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai