வரலாற்றுக் காலம் – 18

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட கட்டுமான அமைப்பும் அந்தக் கலைநுணுக்கமும், இன்றைக்கும் அனைவராலும் வியந்து பாராட்டத்தக்க நிலையில் உள்ளதே, நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற கலைப்படைப

கண்ணனூர்

அமைவிடம்
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில், சமயபுரம் அருகே அமைந்துள்ளது கண்ணனூர். சமயபுரம் மாரியம்மன் கோயிலின் அருகேயும், புள்ளம்பாடி வாய்க்காலின் வடகரையிலும் அமைந்துள்ள இப்பகுதி, மிகவும் வரலாற்றுச் சிறப்புபெற்ற இடங்களில் ஒன்று. இவ்வூர், கி.பி. 12-ம் நூற்றாண்டில் சோழர்களின் கீழ் குறு நில மன்னர்களாக இருந்து பின்னர் தமிழகத்தின் சில பகுதிகளை ஆட்சி புரிந்த போசள மன்னர்கள் ஆளுகைக்கு உள்பட்ட இடம். இங்கு, அவர்கள் எழுப்பிய போசளீஸ்வரர் கோயில் இன்றும் போசள மன்னர்களின் ஆட்சிக்கு அடையாளமாகத் திகழ்கிறது.

அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட Sumpwell

அகழாய்வுச் செய்திகள்
கண்ணனூரில் மூன்று அகழ்வுக் குழிகள் தோண்டப்பட்டன. முதல் குழியிலேயே செங்கல் கட்டுமானப் பகுதிகள் வெளிப்பட்டன. செங்கல் கட்டுமானத்தை தொடர்ந்து, அதன் மையப் பகுதியில் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டுத்தொட்டி ஒன்றும் வெளிப்பட்டது. இந்த அகழ்வுக் குழியின் மையப் பகுதியில் 10 மீட்டர் ஆழத்தில், பாறையைக் குடைந்து அதில் நீரோட்டம் செல்லும் வகையில் வாய்க்கால் ஒன்று காணப்பட்டது. இவ்வாய்க்கால், நன்கு செதுக்கப்பட்ட கற்பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்க்கால் காற்று புகாவண்ணம் நன்கு மூடப்பட்டுள்ளது. இக்கால்வாயில் கட்டப்பட்டுள்ள கற்கள் கொண்டு கட்டப்பட்ட கட்டுத்தொட்டியானது (Sumpwell), அடிப்பகுதி அகன்ற நிலையிலும், மேலே வரவர குறுகிக்கொண்டே வந்து மேல் பகுதியில் ஒரு சிறிய தொட்டி போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் இருந்தே தண்ணீரை எடுத்துக்கொள்வது போன்ற அமைப்பில் அமைத்துள்ளனர்.*1 மையப் பகுதி மட்டுமே கற்பலகைகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேற்குறித்த செங்கல் கட்டுமானம், இக்கட்டுத்தொட்டிக்கு வலுகொடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகக் காணப்படுகிறது.

அகழ்வுக் குழியில் இருந்து மையப் பகுதியில் அமைந்துள்ள இத்தொட்டியின் ஆழம் 6.10 மீட்டர் ஆகும். மேல் பகுதியில் முடியும் இடத்தில் 50 செ.மீ. நீளம், 50 செ.மீ. அகலம் கொண்ட ஒரு சதுர வடிவில் இத் தொட்டியை அமைத்துள்ளனர். இக்கால்வாய் 4.30 மீட்டர் வரை தொடர்ந்து சென்றது.*2 இக்கால்வாய், புள்ளம்பாடி வாய்க்காலின் மேல் கட்டப்பட்டுள்ளதால், இது குடிநீர் வாய்க்கால் என்பதும், மேலும் கண்ணனூர் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி கருதியும் இதனை போசளர்கள் அமைத்திருக்கலாம் என்றும் கருத வழிவகுக்கிறது.

தொல்பொருள்களாக சுடுமண் மணிகள், கண்ணாடி வளையல் துண்டுகள், உடைந்த அரிவாள் மற்றும் பல இரும்புப் பொருட்கள், கூரை ஓடுகள், செலடைன் பானை ஓடுகள் போன்ற தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்து நீரை எடுத்துப் பயன்படுத்த வேண்டும், அதுவும் அந்நீர் தூய்மையாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை மனத்தில் கொண்டு அதற்கேற்ப வடிவமைத்து, அமைத்த கட்டடக் கலையையும், ஆற்றின் போக்கை மாற்றியமைத்து அதன் நடுவே கட்டுத்தொட்டி அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இப்பகுதி, போசளர்களின் தலைநகரமாகத் திகழ்ந்ததால், பொ.ஆ. 12-13-ம் நூற்றாண்டில் மிகுந்த செழிப்புடன் திகழ்ந்தருக்க வேண்டும் என்பது திண்ணம்.*3
*

படைவீடு

அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தை குறிக்கும் வரைபடம்

அமைவிடம் திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டத்தில், சந்தவாசல் அருகே அமைந்துள்ளது படைவீடு எனும் சிறு கிராமம். திருவண்ணாமலையிலிருந்து வடக்கே 27 கி.மீ. தொலைவிலும், வேலூரிலிருந்து தெற்கே 40 கி.மீ. தொலைவிலும், ஆரணியிலிருந்து மேற்கே 27 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சோழர்களின் குறுநில மன்னர்களாகத் திகழ்ந்த சம்புவராயர்கள், இப்பகுதியில் ஒரு படைவீடு அமைத்து ஆட்சி புரிந்துவந்தனர். இங்கு சோழர், விஜயநகர மன்னர்கள் கட்டிய கோயில்கள் காணப்படுகின்றன.

படைவீடு என்பது அரசனுக்குரிய படைகள் அமைந்த இடம் என்பர். சோழர்களும், பழையாறையில் பம்பப்படை, ஆரியப்படை போன்ற படைவீடுகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். பாண்டியர்கள், பொருணை ஆற்றங்கரையில் ஒரு படைவீடு அமைத்துச் செயல்பட்டனர். அதனை மணப்படைவீடு என்றும் அழைத்துள்ளனர். இம் மணப்படைவீடு, பாண்டிய நாட்டுத் துறைமுகமான கொற்கைக்குப் பாதுகாப்பாக இருந்துள்ளது எனக் குறிப்பு காணப்படுகிறது. சம்புவராயர்கள் அமைத்துக்கொண்ட படைவீடும் அதைப்போன்றதுதான். இங்கு காணப்படும் மலையின் மேல்பகுதியில் ஒரு கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை, ராஜகம்பீர சம்புவராயர் என்ற மன்னனால் கட்டப்பட்டது என கல்வெட்டுக் குறிப்பு தெரிவிக்கிறது.*4
 

 அகழ்வுக் குழிகளின் தோற்றம்

அகழாய்வு
தொடர் வரலாற்றுச் சிறப்புகொண்ட படைவேட்டில் உள்ள கல்வெட்டுகளும், கோயில் சிற்பங்களும் பல செய்திகளைத் தெரிவிக்கின்றன. இவற்றை உறுதிசெய்யவே, இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை திட்டமிட்டது. இங்கு 12 அகழ்வுக் குழிகள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல் மூன்று குழிகள் வேட்டகிரி பாளையத்திலும், நான்கு முதல் பன்னிரண்டு வரையிலுமான குழிகள் இவ்வூர் கோட்டைத் தலையாரி கோயிலுக்கு மேற்கிலும் தோண்டப்பட்டன. அகன்ற முறை அகழாய்வு, ஆழ முறை அகழாய்வு என இரு முறைகளும் பயன்படுத்தப்பட்டன. இவற்றில், மக்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் பானை ஓடுகளும், கட்டடப் பகுதிகளும் வெளிப்படுத்தப்பட்டன. அடுத்து குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர் வாய்க்கால்கள் என நான்கு வகையான கால்வாய்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளிலேயே, முதன்முதலாக அரண்மனைப் பகுதியில் நான்கு விதமான அமைப்பில் கட்டப்பட்ட கால்வாய்களை ஒரு கட்டடப் பகுதியின் கீழே இருந்து அகழ்ந்து வெளிக்கொணரப்பட்டது படைவீட்டில்தான் என்றால் அது மிகையாகாது.


கட்டடப் பகுதிகள்
அகழாய்வில். கி.பி. 16-17-ம் நூற்றாண்டைச் சார்ந்த கட்டடப் பகுதிகள் அதன் மேல் பகுதியில் காரைப்பூச்சுடன் அகழ்ந்து வெளிக்கொணரப்பட்டன. சுண்ணாம்புக் காரைப்பூச்சு உள்ள தரைப் பகுதியின் அடிப் பகுதி, செங்கற் ஜல்லியும், கருங்கல் ஜல்லியும் கலந்து அமைக்கப்பட்டுள்ளது.

அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட சுண்ணாம்பு காரைப்பூச்சு கொண்ட தரைத் தளம்

இந்தக் கட்டடப் பகுதியில்தான், குடிநீர்க் குழாய்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களும் வெளிக்கொணரப்பட்டன.*5 இவை அனைத்தையும் ஒப்பு நோக்கும்போது, சம்புவராயர்கள் வாழந்த அரண்மனைப் பகுதியாக இவை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சோழர்களின் குறுநில மன்னர்களாகவும், சிலகாலம் தனித்தும் சம்புவராயர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர். அவர்கள் தங்களின் தலைமையிடமாகக் கொண்டது இப்படைவீட்டையே என்றால் அது மிகையாகாது. அதற்கேற்ப, இங்கு வெளிக்கொணரப்பட்ட தொல்பொருட்களைப் பார்க்கையில், இவ்விடம் சம்புவராயர்களின் அரண்மனைப் பகுதி என்பதில் ஐயம் ஏதுமில்லை. படைவீட்டில் ஏராளமான கோயில்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை சம்புவராயர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டவையே.

அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதிகள்
 

நான்குவிதமான கால்வாய்களின் மாதிரி வரைபடம் (1. சுடுமண் குழாய் மூலம் அமைத்த கால்வாய்; 2. செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கால்வாய்; 3.  பல நீண்ட கற்பலகைகள் கொண்டு அடுக்கி அதன் பக்கவாட்டில் ஜல்லி சுண்ணாம்புக் கல், சுண்ணாம்பு காரை கலந்து கட்டப்பட்ட கால்வாய்; 4.   ஒரே கல்லில் குடைந்து அமைக்கப்பட்ட கால்வாய்)

திறந்த வெளியில் அமைக்கப்பட்ட கருங்கல் கால்வாய் தொடர்ச்சி

கால்வாய்கள்


இங்கு நான்குவிதமான கால்வாய்கள் கண்டறியப்பட்டன. அவற்றைப் பற்றி காண்போம்.

1. கழிவுநீர்க் கால்வாய் - திறந்தநிலையில், கட்டடத்தின் இறுதிப் பகுதியில்; நீளமான கருங்கல்லால் மேல்பகுதியை குடைந்து அமைத்த ஒன்று. திறந்தநிலை அமைப்பைக் கொண்டது.

2. குடிநீர்க் கால்வாய் – சுடுமண் குழாய் கொண்டு ஒன்றை ஒன்று இணைத்து அமைக்கப்பட்டது.

3.    தினசரி பயன்பாட்டுக்கானது - இது செங்கற்களைக் கொண்டு அடுக்கி மேல் பகுதியில் அமைக்கப்பட்ட ஒன்று. இதன் கட்டுமான அமைப்பு தரைப் பகுதியில் கிடைமட்டமாக ஒரு செங்கல்லும், அதன் பக்கவாட்டில் செங்கற்களை நிற்கவைத்து, அதன் மீது மேலும் ஒரு செங்கல்லை வைத்து மூடப்பட்டு, தொடர்ந்து தேவையான அளவுக்கு அதனை நீட்டித்துக் கட்டி பயன்படுத்தியுள்ளனர்.

4. குடிநீர்க் கால்வாய் - இது நன்கு செதுக்கப்பட்ட கற்பலகைகளைக் கொண்டு அடுக்கி அமைத்த நீண்ட கால்வாய். இக் கால்வாயின் வெளிப்பகுதியில், கற்பலகைக்கு வெளியே சுண்ணாம்பு காரைப்பூச்சு கொண்டு இடைவெளி இல்லாதவாறு நன்கு பூசப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதால், அது சுத்தமான, குளிர்ந்த நீர்வரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள ஒன்று என்பது தெளிவாகிறது. இது கட்டப்பட்டுள்ள விதம் குறிப்பிடத்தக்கது.
 

குடிநீர்க் கால்வா, திறந்தநிலைக் கால்வாய், அடுத்து செங்கல்லால் கட்டப்பட்ட கால்வாய், நன்கு மூடப்பட்ட நிலையில் ஒரு கால்வாய்

தொல்பொருட்கள்
முதலாம் இராசராசன் செப்புக்காசு ஒன்றும், விஜயநகர காலத்து செப்புக்காசும், முகலாயர்கள் காசுகளும் கிடைத்துள்ளன. அதிக அளவில் கூரை ஓடுகளும், சுடுமண் மணிகள், சுடுமண் குழாய்கள், தந்தத்தால் ஆன சொக்கட்டான் காய், கல்மணிகள், சுடுமண் விளக்குகள், தோசைக்கல், காசுகளை வார்க்கும் அச்சு, தீபக்கலசம், இவற்றுடன் இடைக்கால பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.*6

அகழாய்வு முடிவு
இவ்வகழ்வாய்வு படைவீடு, ஒரு நகரத்தின் செழிப்புடன் இருந்துள்ளது என்பதையே தெளிவுபடுத்துகிறது. சம்புவராயர்கள் இப்பகுதியைத் தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்துள்ளதை இங்கு கிடைத்துள்ள தொல்பொருட்கள் உறுதி செய்கின்றன.

மேற்கோள் சான்றாதாரங்கள்
1. T.S. Sridhar, Excavations of Archaeological sites in Tamil Nadu, 1969-1985), Govt. of  Tamil Nadu, Dept. of Archaeology, Chennai 8.
2. Ibid.,
3. Ibid.,
4. N. Kasinathan, Excavations at Padaiveedu.
5. Ibid.,
6. Ibid.,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com