வரலாற்றுக் காலம் – 17

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட கட்டுமான அமைப்பும் அந்தக் கலைநுணுக்கமும், இன்றைக்கும் அனைவராலும் வியந்து பாராட்டத்தக்க நிலையில் உள்ளதே, நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற கலைப்படைப

கங்கைகொண்ட சோழபுரம் – தொடர்ச்சி

12. சுடுமண் வட்டுகள்

சுடுமண் வட்டுகள், அக்கால மக்களின் சில்லு விளையாட்டுப் பொருளாகும். இவ்விளையாட்டை பெரும்பாலும் மகளிர் மட்டுமே விளையாடக்கூடியதாகக் கருதப்படுகிறது. இது ஒரு மென்மையான விளையாட்டு. ஆடவர் பெரும்பாலும், காளையை அடக்குதல் போன்ற கடுமையான வீர விளையாட்டையே விளையாடியுள்ளனர். எனவேதான் சில்லு விளையாட்டு, தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள் பெரும்பாலும் பெண்கள் விளையாட்டாக அக்கால மக்கள் கருதினர்.

சுடுமண் வட்டுகள்

13. சுடுமண் புகைப்பான்கள்

கங்கைகொண்ட சோழபுரத்தில், பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 18-19-ம் நூற்றாண்டு வரை ஒரு தொடர்ச்சியான அரசுமுறை நிர்வாகமும் அதனைத் தொடர்ந்த மக்கள் வாழ்க்கைமுறைகளும் அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப மாறுபட்ட தங்களின் வாழ்க்கையை நடத்திச் சென்றுள்ளனர் என்பதற்கு இங்கு பல தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒன்று, சுடுமண் புகைப்பான்கள். விஜயநகர மக்களின் ஆதிக்கமும் பாளையக்காரர்களின் வருகைக்குப் பின்னும் புகைப்பிடிக்கம் பழக்கம் பரவலாக நடைமுறைக்கு வந்தது எனலாம். அதாவது, பொ.ஆ. 16–17-ம் நூற்றாண்டு முதல் புகைப்பான்கள் பழக்கம் அதிகரிக்கத் துவங்கியது எனக் கருதுவர். முகலாயர்களும், பாளையக்காரர்களும் தமிழகத்துக்கு வந்து நிலையாகத் தங்கியபொழுது இப்புகைப்பழக்கமும் இங்கு நிலைத்துவிட்டது.

சுடுமண் புகைப்பான்கள்

14. போர்ஸலைன் மற்றும் செலடைன் மட்கலன் ஓடுகள்

கங்கைகொண்ட சோழபுரத்தில், இடைக்காலத்துப் பானை ஓடுகளும், சீன தேசத்துப் பானை ஓடுகளான போர்ஸலைன் மற்றும் செலடைன் வகைகள் அதிக அளவில் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை, சீன தேசத்தோடு சோழர்கள் கொண்டிருந்த வர்த்தக உறவை வெளிப்படுத்துகின்றன. சிறிய அளவிலான கோப்பை, குடுவை, கிண்ணம் போன்ற போர்ஸலைன் மட்கலன் ஓடுகள் அதிகமாகச் சேகரிக்கப்பட்டுள்ளன. போர்ஸலைன் மட்கலன் என்பது வெள்ளைக் களிமண் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு மட்கலன் வகை. இது, இட்சுவாங் காலம் முதல் பழக்கத்துக்கு வந்தது. இங்கு கிடைத்தவற்றின் காலம் பொ.ஆ. 9-10-ம் நூற்றாண்டு ஆகும். இக்காலகட்டத்தில், சீன தேசத்தோடு சோழர்கள் கொண்டிருந்த உறவால், இம்மட்கலன்களை தமிழகத்தில் அதிகமாகப் பயன்படுத்தத் துவங்கினர் எனலாம். இவை அளவில் மிகச் சிறியவையாக இருக்கும். மேலும் இம்மட்கலன்கள் சுத்தம் செய்யவும், பயன்படுத்தவும் மிகவும் எளிமையாக இருந்ததால், மக்களின் வரவேற்பை எளிதில் பெற்றன. இதனுடனே இணைந்து அறிமுகமானது செலடைன் மட்கலன்கள். இவை தடிமனாகவும், அளவில் பெரியதாகவும் இருக்கும். குடம், குடுவை, கெண்டி போன்ற சேமிக்கும் கலன்களாக இவற்றைப் பெரிதும் பயன்படுத்தினர். இவற்றில் எண்ணெய் மற்றும் பிற திரவப் பொருட்கள் சேமிக்கவும், அதனைப் பாதுகாக்கவும் எளிதாக இருந்தது. எனவே இம்மட்கலன்களும் தமிழகத்தில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன எனலாம். இவை வெளித்தோற்றத்தில் இளம்பச்சையும் மஞ்சளும் கலந்த நிலையிலும் பாசி நிறத்திலும் காணப்படும். வெளிப்புறம் நன்கு பளபளப்பாக இருந்தாலும் உட்புறம் சற்று கடினத்தன்மையுடன் காணப்படும். இவை மிகவும் உறுதித்தன்மை கொண்டு தயாரிக்கப்பட்டவை.

15. குறியீடுகள் பொறித்த செங்கற்கள்

கூட்டல் குறியீடுகள் பொறிக்கப்பட்ட நிலையில் பல செங்கற்கள் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன. இவை கட்டுமானத்துக்காக கட்டுமானத் தொழிலாளர்களால் போடப்பட்ட குறியீடு என்பர். இதுபோன்ற குறியீடுகள் கட்டடப் பகுதிகளிலும் காணப்பட்டன. இக்குறியீடுகள் செங்கற்களைச் சுடுவதற்கு முன்னரே போடப்பட்டதால், முக்கியமான பகுதிகளில் வைப்பதற்காக முன்கூட்டியே தயார் செய்திருக்கலாம்.

16. சிம்மம் பதித்த மணற்கல் வட்டு (அலங்காரப் பொருள்)

கற்களில் வட்டமான தட்டு போன்ற வடிவில் பல்வேறுவிதமான அலங்காரப் பொருட்கள் தயார் செய்து அரண்மனைப் பகுதிகளில் ஆங்காங்கே பதித்துள்ளனர். அவற்றில் மிகவும் முக்கியமானது மணற்கல்லில் தயாரித்த ஒன்று. இதில், தாமரை இதழ்கள் விரிந்த நிலையில் பின்பகுதியும், முன்பகுதியில் சிங்கம் ஒன்று குட்டிகளுடன் விளையாடுவது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பான தொல்பொருள் ஆகும். இதனை, சோழர்களின் வீரத்தை உணர்த்தும் ஒரு தொல்பொருளாகக் கருதலாம்.

17. சுடுமண் கன்று உருவம்

சுடுமண்ணால் செய்த கன்றின் உருவம் ஒன்று கிடைத்துள்ளது. வளமைச்சடங்கின் அடிப்படையில், வழிபாட்டின் நோக்கமாக இதனை தயாரித்திருத்தல் வேண்டும். விவசாயத்தை அடிப்படை தொழிலாகக் கொண்ட மக்கள் தங்களது தொழிலை துவங்குவதற்கு முன், இதுபோன்ற பசு, கன்று உருவங்களை வைத்து வழிபடுவது வழக்கம். இப்பண்பாடு, சங்ககாலத்தில் இருந்து தொடர்ச்சியாக வந்துள்ளது என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

18. அலங்கரிக்கப்பட்ட மட்கலன் ஓடுகள்

மட்கலன்களில் சோழர் கால மட்கலன்கள் தனித்துவம் பெறுகின்றன. இதன் விளிம்புகளும் அதன் கீழ்ப்பகுதியில் காணப்படும் அலங்காரங்களும் சிறப்புபெற்ற ஒன்றாகும். தட்டையான விளிம்பும், வெளிப்புறம் நீட்டப்பட்ட அமைப்பும், இரண்டடுக்கு விளிம்புகளும் அந்த விளிம்புகளுக்கு கீழேயே குத்தூசியால் குத்தப்பட்டு அழகு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பானை முழுவதும் பல இணைப்புக்கோடுகளையும், அந்தக் கோடுகளுக்குள்ளே பல்வேறுவிதமான அலங்காரங்களையும் செய்துள்ளனர். இவை, அக்கால மக்களின் கலைத்திறனையும் கற்பனை வளத்தையும் காட்டுகின்றன.

19. சுடுமண் விளையாட்டுக் காய்கள்

அகழாய்வில் பல்வேறுவிதமான விளையாட்டுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றில், நீள்உருண்டை வடிவக் காய் ஒன்றும் உருண்டையான காய் ஒன்றும் அடக்கம்.

19. தரையில் பாவப்பட்ட பளபளப்பான சிவப்பு நிறக் கற்கள்

கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனையின் ஒரு பகுதியில், சிவப்பு நிற பளபளப்பான பலகைக் கற்களைக் கொண்டு தரைத்தளத்தை அமைத்துள்ளானர். இவை முழுவதும் நன்கு பளபளப்பாகவும் உள்ளன. இயற்கையாகவும் மிகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதற்காகவும் சோழ மன்னன் இதுபோன்ற கற்களைப் பாவச் செய்துள்ளான். அவற்றின் ஒரு கற்பலகையும், சில உடைந்த கற்பலகைகளும் அகழாய்வில் கிடைத்துள்ளன.

மண்மலை அமைவிடம்

கங்கைகொண்டசோழபுரம் - அணைக்கரை சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் மலை போன்ற ஒரு மண்மேடு காணப்படுகிறது. அதை இவ்வூர் மக்கள் மண்மலை என்று அழைக்கின்றனர். இந்த மண்மேட்டில் இரண்டு அகழ்வுக்குழிகள் தோண்டப்பட்டன. மாளிகைமேட்டுப் பகுதியில் 2.70 மீட்டர் ஆழத்தில் கிடைத்த சுவற்றின் அமைப்பு போலவே மண்மலையிலும் கிடைத்துள்ளதால், இதுவும் அதன் சமகாலத்தைச் சேர்ந்தது என்று சொல்லலாம். இங்கு காணப்பட்ட செங்கற்களின் அளவுகளும், கட்டுமான அமைப்பும் ஓரே தோற்றத்தில் காணப்படுவதால், இவற்றை சோழமாளிகையின் ஒரு பகுதியே எனலாம். சோழ மாளிகையின் பகுதிகள் கோயிலைச் சுற்றிலும் சுமார் 5 கி.மீ. தொலைவு வரை பரவலாக இருந்துள்ளன என்பதற்கு மண்மலை அகழாய்வு ஒரு சான்றாகும். இங்கு காணப்பட்ட சுவற்றின் தடிமன் 2.70 மீட்டர் ஆகும். இங்கும் இரட்டைச்சுவர் அமைப்பிலேயே இது வெளிப்படுத்தப்பட்டது.

குருவாலப்பர்கோயில்

கங்கைகொண்ட சோழன் மாளிகையைச் சுற்றிலும் கோட்டை மதில் சுவர்கள் இருந்துள்ளது என்பதை கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்கள் கூறுகின்றன. இதை உறுதிப்படுத்தவே இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உட்கோட்டை செல்லும் பாதையில் ஒரு அகன்ற அகழியும், அதனை அடுத்து ஒரு மண்மேடும் காணப்படுகின்றன. இந்த மண்மேட்டில் அகழாய்வு செய்யப்பட்டது. கிழக்கு மேற்காகச் செல்லும் இந்த மண்மேட்டில் 1 மீட்டர் ஆழத்தில் 2.50 மீட்டர் தடிமனில் சுவர் ஒன்று கண்டறியப்பட்டது. இதன் தடிமன் மற்றும் கட்டுமான முறையைக் கொண்டு, இச்சுவர் கோட்டை மதில்சுவராகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. சுவற்றின் இருமருங்கிலும் நன்கு செதுக்கிய செம்புராங் கற்களையும், இடையில் உருண்டையான கற்களையும் கொண்டு நிரப்பியுள்ளனர்.*1 ஆக, இது வலுவான கோட்டை மதில்சுவர் என்பதில் ஐயமில்லை. இதனை மஞ்சள் கலந்த களிமண் கொண்ட கலவையால் மேல்பூச்சு வேலை செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியை அறிய 50 மீட்டர் இடைவெளி விட்டு, கிழக்குப் பகுதியில் 200 மீட்டர் வரை தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கும் செம்புராங் கற்கள் தொடர்ச்சியாகக் காணப்படுவதை அறியமுடிந்தது. கிழக்கு மேற்காகச் செல்லும் இந்த மதில் சுவர் 200-வது மீட்டரில் தெற்கு நோக்கி வளைகிறது. இதற்குப் பிறகு இதன் தொடர்ச்சியை காண முடியவில்லை எனினும், இச்சுவர் சுண்ணாம்புக்குழி வழியாக ஆயுதக்களம் சென்றடைகிறது.*2 பின்னர் அங்கிருந்து இடைக்கட்டு வழியாக கடாரங்கொண்டான் பகுதியில், மீண்டும் இந்த மதில்சுவர் வடக்கு நோக்கிச் செல்கிறது. பின்னர் இது மீண்டும் குருவாலப்பர் கோயில் அருகே கிழக்கு நோக்கித் தொடர்வதை காணலாம். எனவே, ராஜேந்திர சோழன் கட்டிய கோட்டை மதில்சுவர் இதுவே எனத் துணியலாம். பின்னர் வந்த மன்னர்கள் அதனை காலத்திற்கு ஏற்ப மாற்றி அல்லது புனரமைத்து செப்பனிட்டிருக்க வேண்டும். அதை, அகழாய்வு குறிப்புகளும், மேற்பரப்பு ஆய்வுக் குறிப்புகளும் தெளிவுபடுத்தியுள்ளன.*3 கோட்டைச் சுவர் என்று கருதப்பட்ட சுவற்றை ஒட்டி, அகன்ற பரப்பளவில் ஒரு கால்வாய் போன்று நான்கு பக்கமும் செல்கிறது. இதை இக்கோட்டைக்கான அகழி எனலாம்.

கல்குளம்

மாளிகைமேட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒரு குளம் அமைந்துள்ளது. இக்குளம் வரலாற்றுச் சிறப்பு கொண்டது என, மேற்பரப்பு ஆய்வில் அங்கு காணப்பட்ட ஓரிரு கருங்கல் பலகைக்கற்கள் கொண்டு உணரமுடிந்தது. இக்கற்கள் 60 செ.மீ. நீளமும் 40 செ.மீ. தடிமனும் இருந்ததால், இவை ஏதேனும் ஒரு பயன்பாட்டின் அடிப்படையில் அமைத்திருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில், இப்பகுதியில் 2 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளத்தில் ஒரு அகழ்வுக்குழி அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கோள்ளப்பட்டது.

கல்குளம் அகழ்வில் வெளிப்படுத்தப்பட்ட, கற்கலால் கட்டப்பட்ட குடிநீர்க் கால்வாயின் வெளிப்படுத்தப்பட்ட தோற்றம் - மாதிரி வரைபடம்

ஆய்வில், கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைக்குக் குடிநீர் வசதிக்காக கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு வாய்க்கால் 2 மீட்டர் ஆழத்தில் இருப்பதையும், இது தெற்கு வடக்காகக் செல்வதையும், இக்கால்வாய் ஒழுங்கற்ற கற்களைக் கொண்டு மூடப்பட்ட நிலையில் இருப்பதையும் காணமுடிந்தது. மேலும், இந்தக் கால்வாயின் இரண்டு பக்கங்களையும் செம்புராங் கற்களைக் கொண்டு நெருக்கமாக அமைத்துள்ளதையும் காணமுடிந்தது.*4 ஆகவே, இக்கால்வாய் குடிநீர்க் கால்வாயாக இருக்க வேண்டும் என உணரமுடிந்தது. நீர்வரத்துப் பகுதியான உட்பரப்பில் சமமான கரும்பலகைக்கல்லை வைத்து பதித்துள்ளனர். சுற்றுப்பகுதிகளில் நன்கு மூடப்பட்ட காரைப் பூச்சு பூசப்பட்ட நிலையில் இவை காணப்பட்டதால், இக்கால்வாய் குடிநீருக்கான வாய்க்காலாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதலாம்.

பொன்னேரியின் தோற்றம் (சோழகங்கம்)

பொன்னேரி மதகு

ராஜேந்திர சோழன் தனது கங்கையின் வெற்றிக்குப்பின், தனது வெற்றியின் நினைவாக கங்கையில் இருந்து நீர் கொண்டுவந்து, தான் புதிதாக ஏற்படுத்திய தலைநகரத்தின் அருகே ஒரு பெரிய ஏரியை வெட்டி அதில் கலந்துவிட்டான். பின்னர் அந்த ஏரிக்கு சோழகங்கம் என்றும் பெயரிட்டு அழைத்து மகிழ்ந்தான் என்பது வரலாறு.*5 தற்போது பொன்னேரி என அழைக்கப்படும் இந்த ஏரி, சோழர் காலத்தியதுதானா என அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே சோழகங்கம் எனும் பொன்னேரியைப் பற்றிய பல கல்வெட்டுச் சான்றுகளும் சாசனங்களும் வெளிப்படுத்தியிருந்தாலும், அகழாய்வுச் சான்று மிகவும் இன்றியமையாதது என்பதால் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், இங்குள்ள இரண்டாவது மதகு தொல்லியல் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 1.2 மீட்டர் ஆழத்தில் பண்டைய செங்கற்களைக் கொண்டு அமைத்த மதகின் பகுதிகள் வெளிப்பட்டன. நீர்வரத்தை தேக்கி, பின்னர் அதனை வெளியேற்றும் அமைப்புடன் குறுகிய வாய் அமைப்பும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. வேகமாக வரும் நீரைத் தேக்கி அதன் வேகத்தை குறைத்து, பின்னர் அந்நீரைப் பள்ளமான ஒரு தொட்டி மூலம் வேகத்தை மேலும் குறைத்து கால்வாய் வழியாக நீர் செல்வதற்கு ஏற்ப அரைவட்ட வடிவில் அதன் அடித்தளத்தை செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது, சோழர் கால நீர்ப்பாசனக் கட்டடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.*6

மதகின் தோற்றமும் அதன் குறுக்கு வெட்டுத் தோற்றமும்

படத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மதகின் அடிப்பகுதி அகன்று ஒரு தொட்டி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேறுவதற்கு முன், இந்தப் பகுதியில் வந்து தங்கும். பின்னர், மதகு திறந்த பின்பு சிறிது சிறிதாக தண்ணீரை வெளியே அனுப்புவதற்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளதைக் காணலாம். இது, அடிப்பகுதியில் இருந்து மேல் பகுதி வரை 2.5 மீட்டர் ஆழம் வரை செல்கிறது. இங்கு காணப்படும் செங்கற் கட்டடம் அடித்தளமாக அமைக்கப்பட்டு, பின்னர் மேல் தளத்துக்கு வந்தபின்பு கற்சுவர்களைக் கொண்டு அமைத்து, அதன் வலிமையையும் நீர்ப்பெருக்கால் கால்வாயின் மதகு உடையாதவாறும் மிகவும் பாதுகாப்பான முறையில் இக்கட்டுமானம் அமைந்துள்ளது. இங்கு காணப்பட்ட செங்கற்களின் அளவுகளும், தொல்பொருட்களும், மாளிகைமேட்டில் கிடைத்த தொல்பொருட்களும் சமகாலத்தவையாக உள்ளன. இதன் அடிப்படையில், சோழகங்கம் ஏரி அமைத்தபொழுதே அதன் கால்வாய்களும் மதகுகளும் கட்டப்பட்டுள்ளன என்பது உறுதியாகிறது. சோழகங்கம் எனும் பொன்னேரி, இப்பகுதியை பொன்கொழிக்கும் பகுதியாகவும் முப்போகமும் விளைச்சலை வழங்கிய கற்பகத்தருவாகவும் விளங்கியுள்ளது. இது, எப்பொழுதும் நீரின் அளவு குறையாது நிறைந்து காணப்பட்ட ஏரியாகும். முழுவதும் ஏரி நிரம்பிய நிலையில் காணும்பொழுது, பொன்னைப்போல் அதாவது தங்கம் போன்று மின்னுகின்ற நிலையை வைத்து இதை பொன்னேரி என்று பெயரிட்டு அழைத்துள்ளனர். தண்ணீர் முழுமையாக நிரம்பியிருக்கும்போது கடல்போல் தோற்றமளிக்கும் அளவுக்குப் பரந்து விரிந்து அமைந்த ஏரியாகும்.

அகழாய்வின் நிறைவான கருத்து

இவ்வகழ்வாய்வின் மூலம், சோழர்களின் இரண்டாவது தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரம் ஒரு விரிந்து பரந்த நகரமாக இருந்துள்ளது என்பது அறியமுடிகிறது. மாளிகையின் கட்டுமான முறை, கட்டட அமைப்பு, மர வேலைப்பாடுகள், தூண்களின் அமைப்பு, மேல்தளங்கள் அமைத்த முறை, கூரை ஓடுகள் பயன்படுத்திய முறை, அதனை வேய்ந்த முறைகள், சுவற்றின் அமைப்பு, பயன்படுத்திய இரும்பாலான ஆணிகள், பிடிப்பு ஆணிகள் என பல்வேறு தொல்பொருட்களுடன், மக்கள் அன்றாடம் பயன்படுத்திய பானைகளின் ஓடுகளும் வெளிக்கொணரப்பட்டன. இவற்றில் இன்றியமையாதது சீன தேசத்து பானை ஓடுகளான போர்ஸலைன் மற்றும் செலடைன் பானை ஓடுகளாகும். இவை, சீன தேசத்தோடு சோழர்கள் கொண்டிருந்த வணிகத்தொடர்பை உறுதிசெய்யும் சான்றாக அமைந்துள்ளன.*7 இவ்வகழ்வாய்வுதான், முதன்முதலில் தமிழகத்தை ஆண்ட ஒரு அரச மரபினர் வாழ்ந்த மாளிகைப் பகுதியை வெளிக்கொண்டு வந்துள்ளது. அவற்றுடன், அக்கோட்டையின் மதில் சுவற்றையும் கண்டறிந்து வெளிக்கொணர்ந்தது இந்த ஆய்வின் தனிச்சிறப்பாகும்.

இந்த ஆய்வின் மூலம், பொ.ஆ. 11-13-ம் நூற்றாண்டு வரை சோழநாடு எவ்வாறெல்லாம் சிறப்புற்றிருந்தது என்பதை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிற அளவுக்கு இங்கு கிடைத்த தொல்பொருட்கள், வரலாற்றின் காலக்கண்ணாடியாகத் திகழ்கின்றன என்றால் அது மிகையல்ல. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட கட்டுமான அமைப்பும் அந்தக் கலைநுணுக்கமும், இன்றைக்கும் அனைவராலும் வியந்து பாராட்டத்தக்க நிலையில் உள்ளதே, நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற கலைப்படைப்பு என்று போற்றுவோம்.

சான்றாதாரங்கள்

  1. S. Selvaraj, Excavations at Gangaikondacholapuram, Tamil Civilization, Quarterly research journal of the Tamil Society, Thanjavur, 1987.

  2. T.S. Sridhar

  3. Ibid.,

  4. ச. செல்வராஜ், கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வு அறிக்கை தொகுப்பு, தருமபுரி 1989.

  5. தி.ஸ்ரீ. ஸ்ரீதர், கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வு அறிக்கை, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை, 2009.

  6. Ibid.,

  7. ச. செல்வராஜ், சீனநாட்டு மட்கலன்கள், கல்வெட்டு காலாண்டு இதழ் 83, 2013.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com