சுடச்சுட

  

  ‘ஒசூர் நாயகி’ - சிற்பத்தில் நிலைத்த தலைப்பலியில் முடிந்த ஒசூர் நாயகியின் ஈசன் காதல்

  By த. பார்த்திபன்  |   Published on : 19th July 2018 11:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  ஈசன் மேல் தீரக் காதல் கொண்ட மதுரை மீனாட்சியோ; கோவிந்தனை வரித்துக்கொண்ட வில்லிப்புத்தூர் ஆண்டாளோ இல்லை இவள். இவள் ‘ஒசூரின் நாயகி’. சந்திரசூடனை உடலும் உயிருமாகக் கொண்டவள். சந்திரசூடேசுவரன், ஒசூர் மலைக்கோயில் மூலவரின் பெயர். மீனாட்சியின் திருமண நற்பேறு ஆண்டாளுக்கு வாய்க்கவில்லை; ஒசூரின் நாயகியைப் போலவே. ஆண்டாள், ஈசனின் சந்நிதியில் கரைந்து ஐக்கியமானாள்; ஒசூரின் நாயகியோ தலைஈந்து தன்னை வழங்கினாள். இவள் செயல் ஆண்டாள் புரியாதது. நிபந்தனையற்ற காதலுடன் கோபாலனை மோகித்த மீராவும் நினையாதது.

  சுந்தரின் நெஞ்சில் உறைபவாளான மதுரை நாயகிக்கோ பெருங்கோயில் குடியிருப்பு. நாராயணனில் கரைத்தவளோ அவனின் பூமாலையிலும், புகழ் மாலையிலும் நித்திய வாசம். கோபாலன் இருக்குமிடங்களில் மீராவின் சுவாசம் சுற்றும். சந்திரனைச் சூடியவனைச் சேர நினைத்தவளின் வாசம் பச்சைக்குளம் தெருவோரம். நடுகல்லாய்ச் சமைந்தவளுக்கு கருவறை ஒரு வெற்று அறை; ‘கருவறை மூலவி’யாய் இருத்தல் ஒரு வேண்டாப் பதவி.

  மீனாட்சியைப் பாட ஆயிரம் பேர் உண்டென்றால், ஆண்டாளோ தானே பெருங்கவியாய் உயிர்த்திருப்பவள். இவ்விரு பெரும்பேறும் ஒசூர் நாயகி அடையாதது. கல்லெடுத்தவர்களும் பெயர் சூட்டிப் புகழ் பாடவில்லை. கல் தொழுதவர்களும் புனையாதொழிந்தனர். மகளின் போக்கில் பெற்றோர் மனம் வெதும்பிக் கைவிட்டனரோ, சுற்றமும் தள்ளி வைத்ததோ நாயகி பெற்ற இந்நிலை. தலைமுறை மாறவே, நகரமயமாதலின் பண்பாட்டுத் தடுமாற்றமோ தொழுகவும் மறந்த கல்லெடுத்த ஊரைக் காண்கிறோம்.

  ஒசூர் நாயகியின் இயற்பெயர் தெரியாது, தாய் தந்தையர் தெரியாது, ஊரும் மண்ணும் தெரியாது. ஆனால் அவர்கள் செல்வச்செழிப்புடன் ஆட்சி புரிந்தவர்கள். ‘ஓசூர் நாயகி’, இக்கட்டுரை ஆசிரியர் வைத்த பெயர். ஓசூரில் நடுகல்லாய் சமைந்திருப்பதால் நாயகிக்கு இந்த ஊர் அடை. சித்திர வெளிப்பாடுகள் கொண்டு இவள் தன் பெற்றோராலும், சுற்றத்தாலும் போற்றி வழிபடப்படவில்லை என்பதை ஊகித்து அறியலாம். நட்பும் ஊரும் அக்கரையுடன் கல்லெடுத்துப் போற்றியுள்ளனர். மகள் தலைஈந்து இறைவனைச் சேர்ந்ததை பெற்றொரும் சுற்றமும் விரும்பியிருந்தால், தலை ஈந்ததைப் போற்றியிருந்தால் கோயிலெடுத்து வணங்கியிருப்பர். தாங்களும் சுற்றமும் வணங்குவதையும் புடைப்பாகச் செதுக்கிக் காட்டியிருப்பர். இன்னும் பெண்ணின் காதலையும் தீரத்தையும் புகழ்வார்த்தைகளையும் கல்லெழுத்துக்களால் என்னென்றும் நிலைத்திருக்க வடித்திருப்பர். இவையாவும் இல்லை என்பதால் புறக்கணித்தனர் என்ற முடிவுக்கு வர வாய்ப்பு ஏற்படுகிறது.

  ஒசூர் நாயகி நடுகல்: அண்மையில் இளங்காலைப்பொழுதில் எடுத்தது.

  நடுகல்லான ஒசூர் நாயகி

  ஒசூரின் பேரடையாளமாக விளங்கும் சந்திரசூடேசுவரர் மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் இந்நடுகல் வீற்றிருக்கிறது. இந்நடுகல்லை ஈரடுக்கு நடுகல்லுக்கும் 15-ஆம் நூற்றாண்டின் நடுகல் சிற்பக்கலைக்கும் சிறந்த உதாரணமாகக் காட்டலாம். நடுகல்லில் சிற்ப நூல் கூறும் சிற்ப செந்நுற்பங்கள் வெளிப்படும் அரிய கலைப்படைப்பாகவும் உள்ளது இது.

  ஒசூர் நாயகி செல்வச் செழிப்பு மிகுந்த அரச மரபில் வந்தவளாகவோ இருக்க வேண்டும். சிற்பத்தில் வெளிப்பட்டுள்ள கம்பீரமும், ஒய்யாரமும், சிறப்பான அணிமணிகளும் அவளது செல்வச் செழிப்பையும், அரச போகத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளன. நல்ல அழங்காரம் கூடிய இரு சேடிப்பெண்களின் இருப்பும் இதனை உறுதி செய்யும்.

  சிற்பக்கலை

  கீழடுக்குக் காட்சி

  நாயகியின் செல்வச் செழிப்பான அரசபோகம் ‘பேரரசு அமர்வு என்ற மகாராஜ லீலாசன’க் கோலத்தில் மையத்தில் சித்தரிப்பதன் மூலமும் சொல்லப்படுகிறது.

  பேரரசு அமர்வு என்ற மகாராஜ லீலாசனக் கோலம் என்பது ‘பீடத்தில் இரண்டு கால்களையும் வைத்து அமர்ந்து, ஒருகாலைப் பீடத்தின் மீது மடக்கியபடி படுக்கையாக வைத்தும் மற்றொரு காலை மடக்கி நிறுத்தியமைத்தும், வலது கையினை மடித்துத் தூக்கி நிறுத்திய அல்லது மார்பை நோக்கியமைத்து இடதுகையைப் பக்கவாட்டில் ஒய்யாரமாய் ஊன்றி உடலை சுகமாய் வளைத்து அமர்ந்திருக்கும் கோலம்’ ஆகும்.

  கீழடுக்கில் நான்கு கால்கள் கொண்ட மேடையிருக்கையில், ஒசூர் நாயகி மடக்கி தூக்கி உயர்த்திய காலில் வலது கைமுட்டியை அமர்த்தி ஒய்யாரமாய்க் கரத்தை டோல முத்திரை காட்டி தொங்கும்படி வீசியிருக்கிறாள். தொங்கும் இடது கரம் முட்டியில் இருந்து மேல்நோக்கி உயர்ந்து பக்கவாட்டில் சாய்வாக நீளும் உள்ளங்கையில் கிளியை அமர்த்திக்கொண்டுள்ளாள். கிளி, நாயகியின் விரலில் இருந்து உள்ளங்கை வரை படர்ந்திருக்கும்படி தம் முன்னங்கால்களை முழுவதும் அழுத்தமாக மடக்கி அமர்ந்திருக்கிறது. சிந்தனை முழுவதும் வீசிக்கிடக்கும் ஈசன் காதலைப் பகிரும் தோழியாய் கிளியை வளர்த்தனளோ ஒசூர் நாயகி அறிகிலோம். தன்னை ஈசனின் அங்கமான மீனாட்சியாகவே கருதிக்கொண்டனள் அல்லது மீனாட்சிக்கு மாற்று தானே என இருந்தனள் என்பதற்குச் சான்றாகவும் கிளி வடிக்கப்பட்டுள்ளதை அறியலாம். குறியியலில் கிளி வளமையின் குறியீடு; சிருங்கார சரசலீலைச் சக்திக் குறியீடு.

  நாயகி கொண்டையை இடதுபுறம் முடித்திருக்கிறாள். காதுமடல்களை மறைக்கும் அளவு வட்டக்குழையான தட்டையான பெரிய கடிப்பைப் பூட்டியுள்ளாள். (கடிப்பு = அளவில் பெரிய தோடு). கழுத்திலிருந்து சற்று கீழாகக் கண்டிகையும், கண்டிகையை ஒட்டியவாறு நெஞ்சுக்குழியில் பதிந்த முகப்புவைத்த பட்டையான சரப்பளியையும் அணிவிக்கப்பட்டுள்ளது. மார்புக்கச்சை அணிவிக்கப்படவில்லை. இருகரங்களிலும் மணிக்கட்டையடுத்து சூடகமும் முழங்கைக்கு மேலும் கீழும் கடக வளைகளும் அலங்கரிக்கின்றன. இடது கையில் தோள் வளை காட்டப்பட்டுள்ளது. வலது கரத்தில் இது தெளிவாகவில்லை அல்லது அணிவிக்கப்படவில்லை. குதிகால்வரை உடலை ஒட்டி மடிப்புகள் கூடிய பட்டாடை அணிந்துள்ளாள். இடுப்பில் இடையணிகளும், விரித்து சிறுதிரைபோல் முன்கொசுவம் எடுப்பாகக் காட்டப்பட்டுள்ளது. காலில் பாதசாலம் போன்று கொலுசு அணிவிக்கப்பட்டுள்ளது.

  நாயகியின் இருபுறமும் சிறிய உருவில் இரு சேடிப்பெண்கள் நாயகிக்கு உதவியாய் நிற்கின்றார். இவர்களின் உடைகளும், அணிமணிகளும் மிக்கச் செழிப்பைக் காட்டுகின்றன. ஏறத்தாழ நாயகியை நிகர்த்தவர்கள். இவர்கள் தம் கரங்களில் கிண்ணம் அல்லது மலர்க் கொத்தை ஏந்தியவர்களாக உள்ளனர்.

  ஒசூர் நாயகி நடுகல்: 10 ஆண்டுகளுக்கு முன் பகல்பொழுதில் எடுத்தது.

  தலை ஈந்த நாயகி

  கீழடுக்கில் வலதுபுறமாக நாயகி இருபங்கமாக ஒய்யாரமாக நின்றகோலத்தில் காட்சியளிக்கிறார். பேரரசு அமர்வில் பூண்டிருந்த அதே அணிமணி அலங்காரம் கொண்டுள்ளாள். இடது கரம் தோளிலிருந்து தொங்கி டேலமுத்திரையுடன் காட்சியளிக்கிறது. வலது கரமானது மேல் நோக்கியுயர்ந்து தன்னை ஈசனுக்கு தலைப்பலியாக்கி அர்ப்பணிக்கும் முகமாக கழுத்தைச் அரியும் நீண்ட வாளை உறுதியுடன் பிடித்துள்ளது.

  வெண்சாமரம் ஏந்திய தேவலோகப் பெண்

  கீழடுக்கின் வலது ஓரத்தில் ஒரு பெண் உருவம் இடது கரத்தால் வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. நின்ற கோலத்து நாயகியைப் போலவே காட்சியளிக்கிறாள். வெண்சாமரம் இவள் தேவலோகப் பெண் என்பதை குறிப்பிடுகிறது. இது நாயகி ஈசனின் கையிலாயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் என்பதன் குறியீடு.

  மேலடுக்குக் காட்சி

  மேலடுக்கில் மையத்தில் ஈசனின் அருஉருவான லிங்கத் திருமேனி பிரபாவளியுடன் காட்சியளிக்கிறது. நடுகற்களில் லிங்கத்தைக் காட்சிப்படுத்துவது நடுகல்லுக்குரியோர் ஈசனடி சேர்ந்தனர் அல்லது சிவலோகத்தில் வாழ்கின்றனர் என்பதன் குறியீடாகும். நடுகல்லில் ஈசனை வழிபடுவது என்பது ஈசனடி சேர்ந்த நடுகலுக்குரியோரை வணங்குதல் என்பதாகும். இங்கு வணங்கப்படுபவர் ஒசூர் நாயகி என்போம். ஈசனுக்கு வலதுபுறம் ஒரு அலங்காரமான முக்காலியில் பெரிய சங்கு வைக்கப்பட்டுள்ளது (வலம்புரி?). அடுத்ததாக மேலடுக்கின் இடது ஓரமாக மிகப்பெரிய மணியை இடது கையில் தொடக்கவிட்ட நிலையில் ஒலித்துக்கொண்டும், வலது கரத்தில் பெரிய தீபக்காலால் ஒளியூட்டி பூசைபுரியும் பூசாரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். ஈசனுக்கு இடது புறம் மிகப்பெரிய நந்தி வடிக்கப்பட்டுள்ளது. நந்திக்கு அடுத்து நான்கு பெண்கள் காட்டப்பட்டுள்ளனர். முதல் பெண் இரு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து வணங்கிய நிலையில் உள்ளார் அடுத்த மூவரும் தம்முறைக்காக வரிசையில் காத்துள்ளனர்போல் காட்டப்பட்டுள்ளனர். மூலவரைவிடவும் உயர்ந்த, பெரிதான நந்தி காட்டப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. சுட்டும் பொருள் விளங்கா நிலையில் உள்ளது.

  தலைப்பலி அல்லது நவகண்ட வரலாற்றின் பக்கங்களைத் திருத்தி எழுதும் நாயகி.

  இந்நடுகல் வழிபாட்டுப் பண்பாட்டில் தலைப்பலி, நவகண்ட, தூக்குதலை ஆகிய செயல்களுக்கு அறிந்த விளக்கங்களைத் தரும் வரலாற்றின் பக்கங்களைத் திருத்தி எழுதுகிறது.

  தென்னிந்தியா முழுவதும் சாக்தம் அல்லது சக்தி வழிபாட்டில் காணப்படும் ஒரு வழிபாட்டு முறையே ‘அரிகண்டம்’, ‘தலைபலி’, ‘நவகண்ட பலி’, ‘தூக்குதலை பலி’ என்பர். தன் தலையை தானே ஈவது, தன் உடலை தானே ஒன்பது துண்டங்களாக அறிந்து படைப்பது, தன் தலையை அறுக்கும்பொழுது கீழே விழாது இருக்க தன் தலையை பிடித்துகொண்டு மரக்கிளை, மூங்கில் போன்றவற்றில் கட்டிவிட்டு அறுப்பது என்பன முறையே இவற்றின் பொருளாகும். அரிகண்டம் தலைப்பலி ஆகலாம். ‘சாவாரப்பலி’யை இதனை ஒத்ததாகக் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால், இதன் நோக்கமும், செயலும் வேறு என்பதால் இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை.

  போர் வெற்றி, அரசின் நலம், தெய்வத்தின் கோபத்தால் விளைந்த கொள்ளை நோய் தாக்கி சமுதாயம் அழியாமல் இருக்க, தெய்வத்தை சாந்தப்படுத்த, அல்லது எதிர்பாரா பேராபத்திலிருந்து காக்க போன்ற சமூகக் காரணங்களுக்காகவும், தம் வேண்டுதல் நிறைவேற்றிய தெய்வத்துக்கு நன்றியாகவும் இச்செயல் புரியப்படுகிறது. இவ்வாறு பலி தந்தவர்கள் தெய்வமாகப் போற்றப்பட்டனர். கல்லெடுத்தும் வணங்கப்பட்டனர்.

  ஈசனிடம் காதல் கொண்ட பெண்ணுக்கு எடுக்கப்பட்ட கல் என்ற தனிச்சிறப்பு மட்டுமல்லாமல், ஒசூர் நாயகியின் கல் நடுகல் மரபில் பல புதியனவற்றைப் புகுத்துகிறது. அவற்றை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

  1. ஒரு பெண் தன்னை தலையை இறைவனுக்கு ஈவது.

  2. இறைவனை மணாளனாக அடைய விரும்பிய பெண் செய்த தீரச் செயலைப் போற்றுவது.

  3. பெண்கள் தவிர வேறு வகையில் மரணமடைந்த பெண்களுக்குக்கு கல் எடுக்கும் மரபு இல்லை என்ற வழக்கத்தை மீறிய புரட்சிகரமான கல்லெடுப்பாக இருப்பது.

  4. வழிபாட்டில் பெண்கள் மட்டுமே இடம் பெற்றதைச் சுட்டும் கல். (பூசாரி தவிர).

  5. பெற்றோர் மகளின் போக்கை புறக்கணித்த பொழுதும், நண்பிகளாலும், ஊர்ப்பெண்களாலும் சிறப்பித்து போற்றப்பட தீரம்.

  6. வரையறுக்கும் சிற்பக்கலையை பின்பற்றி வடிக்கப்பட்ட கல்.

  நடுகல் சிற்பவழிச் செய்தி

  ஒசூரில் செல்வச் செழிப்பு மிகுந்த அரச குடும்பத்தில் பிறந்த பெண் – ‘ஒசூர் நாயகி’ - ஈசனான சந்திரசூடேசுவரன்பால் மையல் கொண்டு, இறைவனையே அடைய விரும்பி, தன்னை கிளியேந்தி சிருங்காரம் புரியும் மீனாட்சியாகவே கருதி வாழ்ந்தனள். தாய் தந்தை சுற்றம் நாயகியின் காதலை ஏற்கவில்லைபோலும், நாயகி இறைவனோடு உடலும் உயிருமாய் கலக்கத்தீர்மானித்தாள். அதற்கு அவள் தேர்ந்த நல்வழி தனக்குத்தானே தலைபலி தந்து தம் உடலையும் இன்னுயிரையும் படையலாக்கி ஈசனடி சேர்வது. பெற்றோர், உற்றார் உறவினர் புறக்கணித்த போதிலும், நண்பிகளும், ஊர்ப்பெண்டிரும் அவளைச் சிறப்பித்து கல்லெடுத்து வணங்கினர்.

  நடுகல்லின் சிறப்பு

  நான் அறிந்த முதல் பெண்தலைப் பலிக்கல் இது. இறைவனை அடைய ஒரு பெண் புரிந்த தீரமான செயல். அரிகண்டம், தலைபலி, நவகண்டம் அல்லது தூக்குதலை கொடுத்தல் ஆகிய செயல்கள் வீரத்தின் வெளிப்பாடாகவும் கொள்ளப்படும். ஓசூர் நாயகியின் செயலும் தெய்வீகமும் வீரமும் ததும்பியதே. தலைப்பலி அல்லது நவகண்டம் ஆகிய செயல்களுக்கு அன்று வரை இருந்த மரபார்ந்த பொருளை விடுத்துப் புதிய பொருளை வழங்கியப் புரட்சிகரமானப் பெண்.

  குறிப்பு

  தெரு ஓரத்தில் அநாதையாகக் கிடக்கும், சந்திரசூடனை நாடிய நாயகியின் கல்லை அழிவிலிருந்து பாதுகாக்க ஒசூர் மக்கள் முன்வருவார்களா? குறைந்தது ஒருமேடை அமைத்தேனும் பாதுகாத்து வழிபாட்டுக்கு மீட்பார்களா?

  கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: thagadoorparthiban@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai