Enable Javscript for better performance
தருமபுரி, குமாரசாமிப்பேட்டை மாந்திரீகர் மாரிமுத்து நடுகல்: அறிந்த நடுகல் வரலாற்றைப் புரட்டிப்போடும்- Dinamani

சுடச்சுட

  

  தருமபுரி, குமாரசாமிப்பேட்டை மாந்திரீகர் மாரிமுத்து நடுகல்: அறிந்த நடுகல் வரலாற்றைப் புரட்டிப்போடும் நடுகல்!

  By த. பார்த்திபன்  |   Published on : 19th June 2018 02:43 PM  |   அ+அ அ-   |    |  

   

  சங்க காலம் முதல், நடுகற்கள் எழுப்பப்படுவதில் இடமும் பொழுதும் சார்ந்து அடைந்துள்ள மாற்றங்கள் பலப்பல. இம்மாற்றங்கள், தொல்காப்பியம் அடையாளப்படுத்தும் தமிழர்ப் பண்பாட்டுக் காட்சிகளில் இருந்து பாரதூரமாய் வேறுபட்டுக் கிளைத்தமையின் விளைவுகளாகக் காட்சியளிக்கின்றன. தொல்காப்பியம் முற்றிலும் ஆநிரை தொடர்பாக வெட்சி, கரந்தைப் பூசல்களில் மாய்ந்த வீரர்களை வணங்கும் வீரவழிபாடாக நடுகல்லை அடையாளப்படுத்தும். கல்வெட்டுச் சான்றுகளும், சிற்பக்காட்சி வெளிப்பாடுகளும் பலதிறமாகக் கிளைத்த முன்னோர் வழிபாட்டுக்குச் சான்றுகளாகின்றன.

  சதி, நவகண்டம், தலைப்பலி, உள்பட, விலங்குகளுடன் சண்டை, பெண், ஊர், மானம் காத்தல் ஈராகவும் ஏதோ ஒருவகையில் வீரம் வெளிப்படுத்தி மரணத்தைச் சந்தித்தவர்களுக்கு நடுகற்கள் எழுப்பப்பட்டன. பிற்காலத்தில், அகாலமாக மரணமடைந்தவர் நினைவாகவும் நடுகற்கள் எழுப்பட்டிருக்கின்றன. நிசிதிகை போன்று சமயம் சார்ந்த பெரியோர்கள் உண்ணாநோம்பிருந்து மாய்ந்தவர் நினைவுக்கற்களும் நடுகல் வகைப்பாட்டில் ஒன்றாகின்றன. அண்மையில் கொலை செய்யப்பட்டவர் நடுகல் ஆன வரலாறும் பர்கூர் – நெல்லூர் கொலையுண்டு தெய்வமானவர் நடுகற்கள் (நடுகல் மரபில் நாட்டார் தெய்வ உருவாகம் பற்றிய முதல் ஆய்வு) தலைப்பிலான என் கட்டுரை மூலம் வெளிப்படுத்தப்பட்டது (படிக்க: தினமணி, தொல்லியல்மணி, சிறப்புக்கட்டுரைப் பகுதிக்குச் செல்க).

  நடுகற்களை யார் யார் எடுத்தனர் என்ற விவரத்தைச் சில கல்வெட்டுகள் காட்டுகின்றன. ஊரார், தலைவன், தனயன், அம்மா, தந்தை போன்று உறவுடையோர் ஊர்மக்கள் என்ற விவரங்களை அவை தரும்.

  இப்படி இந்நாள் வரை யாருக்கு எதற்கு யாரால் எடுக்கப்பட்டது என்று அறியப்பட்ட வரலாற்றைப் புரட்டிப்போடும் நடுகல் ஒன்றை, இன்றைக்கு ஏறத்தாழ  ஓராண்டுக்கு முன் நேர்கொண்டேன். தருமபுரி, குமாரசாமிப்பேட்டை இடுகாட்டில் உள்ள இந்நடுகல், மேற்குறிப்பிட்ட இன்றுவரை அறியப்பட்ட எல்லா நடுகல் வரலாற்றையும், நடுகல் மரபு பற்றி பொதுப்புத்தியில் உறைந்த செய்திகளையும், அறிந்த காலட்ட வரலாற்றையும் புரட்டிப்போடுவதாக உள்ளது.

  நடுகல் - மாந்திரீகர் மாரிமுத்து

  பலமுறை இந்த நடுகல்லைக் கண்டிருக்கிறேன். சிலவேளை இதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என நினைப்பேன். சிறப்பான, கலையலங்காரம் கொண்டதில்லை என்றாலும், முதலில் அதன் தற்காலத்திய சிற்பக்கலை வெளிப்பாடுதான் என்னை ஈர்த்தது. நன்கு அறிந்த 18-ம் நூற்றாண்டு வரை நீடித்த நாயக்கர் கால சிற்பக்கலையின் எந்தக்  கூறுகளையும் கொண்டிராத அது, அதனிலிருந்து வேறுபட்ட அண்மைக்கால சிற்பக்கலைக் கூறுகளைக் கொண்டிருந்தது. மயானத்தில் நடுகல்லின் கீழ்ப்பகுதி பெரும்பாலும் சிற்பத்தின் குதிகால் உயரத்துக்கு மண்மேடால் மறைந்திருக்கும் என்பதால், கல்வெட்டை அறியமுடியாதிருந்தது. மேலும், வசதி குறைவு காரணமாக கடந்த 10-15 ஆண்டுகளாக ஊர் மயானம் எம்மூர் மக்களால் குறைவாகவே பயன்படுத்தப்பட்டதால், இந்த இடைவெளிக் காலங்களில் நான் இம்மயானத்துக்கு செல்லும் அவசியம் அமையவில்லை. ஓராண்டுக்கு முன்னர்தான், நிர்ப்பந்தம் வந்தது.    

  நடுகற்கள், பெருங்கற்படைப் பண்பாட்டின் தொடர்ச்சியாக முன்னோர் வழிபாட்டின் நீட்சியாக எழுப்பப்படுபவை. நடுகற்கள் எழுப்பும் பண்பாடு, 17-18-ம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது என்றும், பின்னர் அது மறைந்தொழிந்தது என்று வரலாற்று ஆசிரியர்களும், தொல்லியலாளர்களும் தெரிவிப்பர். இது, 1980-90-களில் வரையப்பட்ட கருத்து. நாயக்கர் காலச் சிற்பங்கலைப் பண்புகளுடன் கூடிய நடுகற்களுக்குப் பின் எழுந்த சிற்பக்கலைக் கூறுகள் கொண்ட நடுகற்கள் அறியப்படாமையும், பிற்கால கல்வெட்டுப் பொறிப்பு கொண்ட நடுகற்கள் வெளிப்படாமையும் 17-18-ம் நூற்றாண்டில் நடுகல் மரபு முடிவுக்கு வந்தமைக்குச் சான்றுகளாயின. ஆனால், அண்மைக்காலத்தில் 18-19-ம் நூற்றாண்டைச் சார்ந்த துப்பாக்கி ஏந்தியவர்களாக உள்ள நடுகற்கள் சில அறியப்பட்டு வருகின்றன. அரிதாக, 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில், 1910-ம் ஆண்டில் எழுப்பப்பட்ட கன்னட மொழி கல்வெட்டுப் பொறிப்புடன் உள்ள நடுகல், கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மாளாபுரத்தில் உள்ளது. (அடிக்குறிப்பு 1). இது ஆங்கிலேய - கிழக்கிந்திய ஆட்சி உருவாக்கத்தைத் தொடர்ந்து நடுகல் எழுப்பும் மரபு அரிதாக மாறிப்போன காலகட்டத்தைக் காட்டுகிறது.  

  கல்வெட்டுப் பகுதி - 1951 மாரிமுத்து

  1951 - கல்வெட்டு ஆண்டுக்குறிப்பு

  குமாரசாமிப்பேட்டை நடுகல் கல்வெட்டு, ஒரு வரிச் செய்தியாக, 1951 மாரிமுத்து என்பதைத் தெரிவிக்கிறது. அதாவது, இது 1951-ம் ஆண்டு மறைந்த மாரிமுத்து என்பவருக்காக எழுப்பட்டது என்பதைத் தெரிவிக்கிறது. இதனால் இக்கல்வெட்டுடன் கூடிய இவ்வெளிப்பாடு, 20-ம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்திலும் நடுகல் எழுப்பப்பட்டமைக்குச் சான்றாகவும் வரலாற்று முக்கியத்துவமும் உடையதாகிறது. (அடிக்குறிப்பு 2). நடுகல் மரபின் இருபதாம் நூற்றாண்டு எச்சமாகவும் இதனைக் கருதலாம்.

  {pagination-pagination}

  மாரிமுத்து வரலாறு

  நடுகல் கல்வெட்டு குறிப்பிடும் மாரிமுத்து என்பவர் வாணிய செட்டியார் வகுப்பைச் சார்ந்தவர். காய்கறி வியாபாரம் செய்துவந்தார். அவரது சொந்தங்கள், இன்றும் தருமபுரி கடைவீதியைச் சுற்றிய பகுதியில் குடியுள்ளனர். ஆனால், அவருக்கும் அவரது சொந்தபந்தங்களுக்கும் தொடர்பு அறுந்துவிட்டது. தொடர்பறுப்புக்கு அவர் வேறு வகுப்பைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதே காரணம். தன் திருமணத்துக்குச் சில காலத்துக்குப் பிறகு அவர், குமாரசாமிப்பேட்டையில் உள்ள செங்குந்தர்குல நண்பர்களின் உதவியுடன் குமாரசாமிப்பேட்டைக்குக் குடியேறி தன் இறுதிக்காலம் வரை வாழ்ந்துள்ளார். அவரது ஒரே மகன் அரசுப்பணி காரணமாக வெவ்வேறு ஊர்களில் குடியிருந்து, பணிக்காலத்தியேயே காலமாகியிருக்கிறார். அதனால், இந்நடுகல் வழிபாட்டில் இருந்து நீங்கியுள்ளது. நீங்கியது 30-35 ஆண்டுகளுக்கு முன்னர்தான் என்று தகவலாளி ஒருவர் கருதுகிறார். (அடிக்குறிப்பு 3).

  இந்நடுகல்லுடன், நடுகல்லுக்கு எதிரில் 5 அடி இடைவெளியில் ஒரு பெரிய வேல் நடப்பட்டதாகவும், வழிபாடு நீங்கிய சிறிது காலத்திலேயே அது திருடப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.  

  தனக்குத் தானே கல்வடித்துக் கொண்டுவந்தவர்

  தன் மரணத்தை முன்கூட்டியே கணித்திருந்த மாந்திரீகர், இந்த நடுகல்லைப் பென்னாகரத்துக்குப் பக்கத்தில் இருந்து செய்வித்துக் கொண்டுவந்தார் என்கின்றனர். தன் சமாதியின் மீது நாள் குறித்து நடப்பட வேண்டும் என தன் நண்பர்களிடம் விருப்பத்தைத் தெரிவித்திருந்ததார். சில மாதங்களிலேயே அவர் இறப்பு நிகழ்ந்தது. அவர் இறப்புக்குப் பின் நண்பர்களும், ஊர்க்காரர்களும் மாந்திரீகரின் விருப்பப்படியே கல்வெட்டுப் பொறித்து நட்டுள்ளனர்.  

  இந்த நடுகல்லில் இருக்கும் உருவம் அவரது மெய்யான உருவமா என்ற கேள்விக்கு, தலை அலங்காரம். கைகளில் ஈட்டி, குண்டாந்தடி இல்லை என்றால் நேரில் இப்படித்தான் இருப்பார் என்கின்றனர். மேலும், அவர் நகை அணிந்து பார்த்ததில்லை என்கின்றனர். கல்லில், முகம் முட்டைவடிவத்தில் உள்ளது; மெய்ப்படி அப்படி இருந்ததில்லை என்று ஒருவர் மறுக்கிறார். இது உருவ ஒற்றுமையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. சிற்பம், மாரிமுத்து விரும்பிய மனத்தோற்றமாக இருக்கலாம், அல்லது சிற்பி மாரிமுத்துவை ஒரு ஊர்க்காவலனாக சிறப்பிக்க ஆயுதங்களுடன் வடித்த சிற்பமாக இருக்கலாம்.        

  மாரிமுத்துவின் சிறப்புகள்

  மாரிமுத்துவின் நினைவு, ஊர் முதியவர்கள் சிலரிடமும், அவர் சார்ந்த கதைகள் சிலரிடமும் பதிந்துள்ளன. அவர் பற்றிய செய்திகளில் இரண்டு செய்திகள் பொதுக்கருத்தாக உள்ளன. 1. அவர் மந்திர தந்திரங்களில் வித்தகர். மாந்திரீகம், மருத்துவம் அறிந்தவர். குழந்தைகளுக்கு வரும் நோய்களை தன் மாந்திரீகம் மூலம் நிவர்த்தி செய்திருக்கிறார். அவர் பிறரால் செய்த மாந்திரீகக் கட்டுகளை நீக்கி, படுக்கையாக இருந்த சிலரை நடக்கும்படி செய்திருக்கிறார். மாந்திரீகம் தொடர்பாக அவர் மயானத்தில் நள்ளிரவு பூசைகள், குறிப்பாக அமாவாசை நாள்களில் செய்துவருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 2. அவர் பல வித்தைகள் கற்றிருந்தார். அதில் ஒன்று சிலம்பாட்டம். ஆனால் போட்டிகளில் அவர் கலந்துகொண்டது பற்றியோ, விருதுகள் பெற்றது பற்றியோ ஒன்றும் விவரம் இல்லை. அப்படி ஏதும் நடக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். அவர் தன் சிலம்பாட்ட வித்தையை நண்பர்கள் உள்பட யாருக்கும் கற்றுத்தரவில்லை. தான் கற்ற மாந்திரீகத்தை யாருக்கும் கற்றுத்தராதது போலவே.

  நடுகல் சிற்பக்கலை     

  கிழக்கு நோக்கி நடப்பட்டுள்ள நடுகல்லில், மாரிமுத்து கரண்டமகுடத் தலை அலங்காரம் கொண்டுள்ளார், இருபுறமும் பின்பக்கமிருந்து பக்கவாட்டில் நேராக விரைத்து, குறுகியதாய் நீண்டு பிறகு தொங்கும் சடைமுடியும் கொண்டுள்ளார். முத்துவைத்த நெற்றிப்பட்டம் அணிந்துள்ளார். காதுகளில் தொங்குகுண்டு காதணி அலங்கரிக்கிறது. கழுத்தில் முகப்பு வைத்த கண்டசரமும், தொப்பூள்வரை தொங்கும் பதக்கமுள்ள ஆரமும் அணிவிக்கப்பட்டுள்ளன. கையிலும், காலிலும் சற்று தடித்த காப்பு பூட்டப்பட்டுள்ளது. வலது கரத்தில் தரையில் ஊன்றி செங்குத்தாக நிற்கும் ஈட்டியும், இடது கரத்தை பக்கவாட்டில் மடக்கி மூட்டியை மேல்நோக்கி தூக்கி, மணிக்கட்டை மட்டும் கீழாக இறக்கி குண்டாந்தடி போன்ற குறுந்தடியை குறுக்காகப் பிடித்தபடி உள்ளார். தொடைவரை ஆடை காட்டப்பட்டுள்ளது. முன்புறம், தொடைகளுக்கு நடுவில் அலங்காரத்துக்காகக் கட்டப்படும் தொங்கும் விறிசி மடிப்பு ஆடைக்கட்டு, இடைவாரில் இருந்து தொங்குகிறது. கால் பாதங்கள் தெற்கு நோக்கியதாகக் காட்டப்பட்டுள்ளன. நடுகல்லை வண்டி வாகனங்களில் ஏற்றி இறக்க வசதியாக, இரு தோளுக்கும்  மேல் இரு துளைகளும், இடுப்பின் இருபுறம் இரு துளைகளும் போடப்பட்டுள்ளன.

  கள செய்திக்குப் பின்

  கல்வெட்டும், கள ஆய்வுத் தகவல்கள் இல்லையென்றால், இந்நடுகல்லை சிற்ப அமைதிகொண்டு, மாந்திரீகர் மாரிமுத்து நடுகல்லை ஈட்டியும், குறுந்தடியும் கொண்டு ஊரைக்காத்த வீரனுக்கு 19-20-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கல் என்றே வகைப்படுத்தியிருப்பேன்; காலத்தை, ஒரு நூற்றாண்டேனும் பழமைகொண்டதாகக் கணித்திருப்பேன். மெய்யில் மாந்திரீகரான அவருக்கும் காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை நினைவில் கொள்வோம். அண்மைக்கால நடுகற்களின் சிற்பக்கலை நம்மை உண்மைக்கு அருகில் கொண்டுசெல்லாமல் திசை தடுமாறவே செய்யும் என்ற தேவையான விழிப்புணர்வையும் இக்கல் தருகிறது.    

  இப்படி நடுகல் மரபில், தொல்காப்பியம் முதல் இந்நாள் வரை அறியப்பட்ட எல்லா செய்திகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வரலாற்றைப் புரட்டிப்போடுகிறது இக்கல். வீரம் வித்தாமலும், அகால மரணம் இன்றியும் நடுகல் எழுப்பப்பட்ட நிகழ்வுக்குச் சான்றாகி, நடுகல் வரலாற்றில் புதிய பக்கங்களை எழுதிச் செல்கிறார், 1951-ல் தனக்குத்தானே கல்லெழுதி நண்பர்களைக் கொண்டு எழுப்பிவித்த மாந்திரீகர் மாரிமுத்து.

  *

  அடிக்குறிப்பு 1

  B.R. Gopal, H.S. Gopal Rao & P.V. Krishnamurthy, Kannada Inscription  of Tamil Nadu, Kannada University, Hambi, Vidyanya, (2000), No.62.

  அடிக்குறிப்பு 2

  1951 ஆண்டுக்குறிப்பில், இறுதி எண் 1 லேசாகச் சிதைந்துள்ளது. அவ்வெண் 2-டோ என தோற்றமயக்கம் தருகிறது. 1 என்பதே சரி என்று தகவலாளிகள் தெரிவிக்கின்றனர்.

  அடிக்குறிப்பு 3

  தகவலாளிகள், குப்புசாமி, வயது 86; குப்பன் வயது 81; தங்கவேலு வயது 89; சண்முகம் வயது 66. நால்வரும் தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் வசிப்பவர்கள். முதல் மூவர், இக்கல்லெடுப்பை  அறிந்தவர்கள். இரண்டாமவர், தன் 14-15 வயதில் கல்லெடுப்பில் பங்குகெடுத்தவர். மாரிமுத்துவின் கரிசனத்துக்கு உரிய குழந்தையாக இருந்தவர். நான்காமவர், தன் மூத்தோர்களிடம் இருந்து பெற்ற தகவல்களைக் கதைகளாகக் கொண்டிருந்தவர், இரண்டு மாதங்களுக்கு முன் இயற்கை எய்தினார்.

  - த. பார்த்திபன்

  கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: thagadoorparthiban@gmail.com

  kattana sevai